தமிழக முதல்வரின் “உலக எய்ட்ஸ் தின செய்தி’

Fri, 11/30/2012 - 20:58 -- Reporter

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “உலக எய்ட்ஸ் தின செய்தி’

உலகம் முழுவதும் டிசம்பர் திங்கள் முதல் நாள், உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம், 2015-ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி. தொற்றினை பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதோடு எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிப்பு செய்யாமை, எய்ட்ஸால் இறப்பு இல்லாமை என்ற இலக்கினை அடையவேண்டும் என்று அறிவித்துள்ளது.

இந்த இலக்கினை அடையும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், அரசின் சுகாதார அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், சமூக சங்கங்கள், அரசின் பிற துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் திட்டங்களினால் எச்.ஐ.வி தொற்று தமிழகத்தில் சீரான நிலையில் குறைந்து வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் எச்.ஐ.வி உள்ளோர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு, பரிசோதனை மற்றும் சிறந்த சிகிச்சைகளை வழங்கிட 1471 நம்பிக்கை மையங்கள், 43 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 30 சமூக நல மையங்கள், 36 நல வாழ்வு மையங்கள் மற்றும் 16 கட்டணமில்லா சட்ட உதவி மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இது தவிர, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள வைப்பு நிதி வட்டியிலிருந்து எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்திற்காகவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் ஆண்டுதோறும் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதிக்கு கூடுதலாக இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் எனது தலைமையிலான அரசால் வழங்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் எனது அரசால் செயல்படுத்தப்படுகிறது. மேலும், எச்.ஐ.வி தொற்றுள்ளோர் கூட்டு மருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று வர கட்டணமில்லா பயணத்திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, தமிழகத்தில் புதிய தொற்றுகள் இல்லாத நிலை உருவாகிட அனைவரும் உறுதி ஏற்று, அதன்படி செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா தமிழக முதலமைச்சர்

Undefined
Topic: 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.