மோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்

Sun, 08/30/2015 - 15:30 -- Velayutham

மோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம் பாட்னா, ஆக. 31 மோடியின் அரசு மக்கள் விரோத அரசு என்று சோனியா பேசினார். பீகாரில் முதல்–மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 29–ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ஒரு அணியும், பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும் உருவாகியுள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பலமுனை போட்டி நிலவியது. முதல் முறையாக இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த தேர்தல் விறுவிறுப்பை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உருவாகியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த லல்லு பிரசாத் யாதவ் நிதிஷ்குமாருடன் கை கோர்த்து தேர்தலை சந்திக்கிறார். பா.ஜனதா கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, நிதிஷ்குமாரிடம் இருந்து பிரிந்த முன்னாள் முதல்–மந்திரி ஜித்தன் ராம் மாஞ்சி மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலைப் போல் பீகாரில் பா.ஜனதா ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். மாநிலத்தை 3 மண்டலமாக பிரித்து ஏற்கனவே 3 பிரசார கூட்டங்களில் மோடி பேச பா.ஜனதா ஏற்பாடு செய்தது. இதில் 2 கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்து முடித்துவிட்டார்.அப்போது பீகார் மாநிலத்துக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கி சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.அவருக்கு போட்டியாக நிதிஷ்குமார் ரூ.2.70 லட்சம் கோடியிலான திட்டங்களை அறிவித்தார். இதனால் இரு கட்சிகளிடையே பிரசாரம் சூடு பிடித்துள்ளது.இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரசாரத்தில் குதிக்கிறார். தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் ஸ்வாபிமான் (சுயமரியாதை) என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்–மந்திரி நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ஒரே மேடையில் கூட்டாக பிரசாரம் செய்தனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் திரண்டிருந்த இந்த கூட்டத்தில் பேசிய லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியையும், பிரதமர் மோடி பீகார் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருவதையும் கண்டித்து தாக்குதல் நடத்தினர்.அவர்களை தொடர்ந்து, மைக்கைப் பிடித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காரசாரமாக தாக்கிப் பேசினார். இந்த கூட்டத்தில் சோனியா பேசியதாவது:- பீகார் மாநிலம், அசோக சக்கரவர்த்தி, சாணக்கியர், குரு கோபிந்த் போன்ற எண்ணற்ற வரலாற்று நாயகர்களை நாட்டுக்கு அளித்த புனித பூமியாகும். இந்த மண்ணின் கண்ணியத்தை காப்பாற்றி, பாதுக்காக பீகார் மக்கள் எப்போதும் தயாரக இருக்கிறார்கள் என்பதற்கு இங்கு கூடியுள்ள மக்கள் கூட்டமே சாட்சியாக உள்ளது. பீகாரை முன்னேறிய மாநிலமாக மாற்றியதில் லல்லு பிரசாத் யாதவின் அர்ப்பணிப்பு முக்கியமானதாகும். பீகாரின் வளர்ச்சிக்காகவும், பீகார் மக்களின் நன்மைக்காகவும் காங்கிரஸ் கட்சி எப்போதுமே பாடுபட்டு வந்துள்ளது. சமீப காலமாக, பீகாரின் கண்ணியத்தை குலைக்க சிலர் முயன்று வருகின்றனர். பீகார் மண்ணின் பெருமைக்காகவும் பீகார் மக்களின் சுயமரியாதைக்காகவும் போராடுபவர்களை ஊக்கப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். ஆண்டுதோறும் ஒருகோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்னவானது? என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வெறும், அலங்கார வார்த்தைகளைத் தவிர மோடியிம் அரசு பீகார் மக்களுக்காக எதையுமே செய்யவில்லை. மோடியின் அரசு மக்கள்விரோத அரசு. ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்து பணக்கார தொழிலதிபர்களுக்கு தாரைவார்க்க மோடியின் அரசு துடிக்கின்றது.பா.ஜ.க.வின் போலி வாக்குறுதிகளுக்கு பதிலடி கொடுக்கவும், மதவாத சக்திகளை எதிர்த்தும் நாங்கள் இங்கே ஒரே மேடையில் திரண்டிருக்கிறோம். இந்த கூட்டணி அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் கூட்டணியாக இருக்கும்.இந்த மாபெரும் கூட்டணிக்கு பீகார் மக்கள் தங்களது முழுமையான ஆதரவை அளிப்பார்கள் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பேசினார்.

Undefined
Topic: 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.