புதிய கருத்தை சேர்

கலைஞரே...தோழரே...திறந்த மனதுடன் உண்மை நிலையை உணர முயற்சியுங்கள் - மரு. இராமதாசு

செவ், 12/04/2012 - 22:54 -- Reporter
Undefined

சென்னை டிச. 4:- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை,

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் கலைஞர் என் மீதும் , பா.ம.க. மீதும் அவதூறு குற்றச்சாற்றுக்களை சுமத்தியிருக்கிறார். சாதிய அமைப்புக்களை திரட்டி, தலித்துகளுக்கு எதிராக அபாயகரமான அரசியல் செய்வதாகவும் , இதற்காக என் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தலித் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள சில சட்ட உரிமைகளை அச்சமுதாயத்தில் உள்ள சிலர் தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னையில் கடந்த 2ஆம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் அனைத்து சமுதாயக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஏற்பாடு செய்தது . அப்போது , எஸ்.சி/எஸ்.டி வன் கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால், அதை தடுக்கும் வகையில் அந்த சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள், தாங்கள் அநியாயமாக பழி வாங்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை சாதிய அரசியல் என்று கலைஞர் முத்திரை குத்துவாரேயானால், என் மீதும் வன்னியர்கள் மீதும் கலைஞருக்கு எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தருமபுரி நிகழ்வுகள் தொடர்பாக கடந்த நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே, தமிழகத்தில் சமுதாய மோதல்களின் பின்னணியில் ஒரு திராவிடத்தலைவர் இருப்பதாக கூறியிருந்தேன். இப்போது பத்திரிகையாளர்களை அவசரம் அவசரமாக அழைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்திருப்பதன் மூலம் அந்தத் தலைவர் தாம் தான் என்பதை கலைஞர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது நான் சாதி அரசியல் செய்வதாக கூறும் கலைஞர் 2001 சட்டமன்றத் தேர்தலின் போது, அனைத்து சாதித் தலைவர்களையும் இணைத்து அமைத்தக் கூட்டணிக்கு பெயர் என்ன? பச்சையான சாதிக் கூட்டணி தானே? அப்போது, இது சாதிக் கூட்டணியா? என செய்தியாளர்கள் கேட்டபோது, இது சாதிக்கும் கூட்டணி என்று கூறினார். அதிகாரத்தை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சாதி அமைப்புகளை அவர் ஒருங்கிணைத்தால் அது சாதிக்கும் கூட்டணி; பழிவாங்கலில் இருந்து காத்துக்கொள்வதற்காகசமுதாய அமைப்புக்களை நாங்கள் ஒருங்கிணைத்தால் அது சாதி அரசியலா? இப்போது தலித்துகளின் நண்பன் வேடம் போடும் கலைஞர், 1968ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது,கீழவெண்மணியில் தலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படலாம் என விவசாய அமைப்புகள் எச்சரித்திருந்த போதிலும், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை;

அதன் விளைவாக, இயேசுநாதர் பிறந்த நாளில் 44 தலித் தொழிலாளர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், அதர்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க வகைசெய்தவர் என்பதை வரலாறு தெரிந்த அனைவரும் அறிவார்கள். 1999 ஆம் ஆண்டில் நெல்லையில் உரிமை கேட்டு பேரணி நடத்திய மாஞ்சோலை தலித் தோட்டத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினரை ஏவி தடியடி நடத்தியதுடன், 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழக்க காரணமாக இருந்தார். அதுமட்டுமின்றி அந்த பேரணியின் போது தலித் தொழிலாளர்கள் தான் வன்முறையை தூண்டினார்கள் என்று பச்சைப் பொய்யைபரப்பி, இறந்த தொழிலாளர்கள் மீது அவதூறு பரப்பியவரும் இவர் தான். இப்படிப்பட்ட கலைஞர் இன்று தலித்துகளின் காவலராக தம்மை காட்டிக் கொள்ள முயல்வது தான் சாதி அரசியல் ஆகும். அதேபோல் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், இன்னும் சில திராவிடக்கட்சித்தலைவர்களும் தலித்துகளுக்கு எதிராக மற்ற சமுதாயங்களை பா.ம.க ஒருங்கிணைப்பதாகவும், காதல் மற்றும் கலப்பு திருமணங்களை எதிர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தக் குற்றச்சாற்றுகளை பா.ம.,க. திட்டவட்டமாக மறுக்கிறது.பாட்டாளி மக்கள் கட்சியோ அல்லது அனைத்து சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்ட பிற அமைப்புகளோ தாங்கள் தலித்துகளுக்கு ஒரு போதும் எதிரிகள் அல்ல என்றும் காதல் நாடகத் திருமணங்கள் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளையும், வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி அரங்கேற்றப்படும் பழிவாங்கலையும் தான் எதிர்ப்பதாக கூறியுள்ளன.

அதேநேரத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த சில கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் அரங்கேற்றும் அத்துமீறல்கள் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை கலைஞரும், பொதுவுடைமை இயக்க தோழர்களும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

* காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்பு மணங்களுக்கோ நாங்கள் எதிரிகள் அல்ல என்பதை பல முறை தெரிவித்திருக்கிறேன். ஆனால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பணம்பறிக்கும் நோக்குடன் பணக்கார குடும்பத்து பெண்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதையும், பின்னர் அந்தப் பெண்ணை திரும்ப ஒப்படைப்பதற்காக பெண்ணின் குடும்பத்தினருடன் பேரம் பேசி லட்சக் கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் பறிப்பதை கலைஞரும், மற்றக்கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா?

* நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் நாடகத் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் 32 இளம் பெண்களும், அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் 37 பெற்றோர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்தக் கட்சிகள் வழங்கும் நீதி என்ன?

* தருமபுரி மாவட்டத்திலும் , தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி முடித்து திரும்பும் மாணவிகளிடம் தலித் சமுதாயத்தை சேர்ந்த சிலர் அருவறுக்கத்தக்க வகையில் ஈவ் டீசிங் செய்வதையும், அதை தட்டிக் கேட்போர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடரச்செய்வதையும் இந்தக் கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா?*தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகபயன்படுத்தப்படுவதை இந்தக் கட்சிகள் ஒப்புக்கொள்கின்றனவா..... இல்லையா? கடந்த 2010ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் நடக்காத ஒரு சம்பவத்திற்காக சென்னையில் இருந்த பா.ம.க. தலைவர் கோ.க. மணி மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

*முகாந்திரமே இல்லாமல் ஒருவர் மீது பயங்கரவாத புகார் சுமத்தி , சிறையிலடைக்க வகை செய்வதற்காக தடா, பொடா ஆகிய சட்டங்களை எதிர்த்த இந்தத் தலைவர்கள் , முகாந்திரமே இல்லாமல் ஒருவர் மீது தலித் புகார் அளித்தாலே, அவரை கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் கொடிய வன் கொடுமை சட்டத்தை எதிர்க்காதது ஏன்? இதன் நோக்கம் தலித்துகளின் வாக்குகளை வாங்குவதாக இருந்தால் அதற்கு பெயர் சாதி அரசியல் அல்லாமல் வேறு என்ன? தருமபுரி சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுக்களை அனுப்பிய கட்சிகள் இந்த நிகழ்வுகள் குறித்தும் உண்மை கண்டறியும் குழுக்களை அனுப்பி உண்மை நிலையை உலகுக்கு தெரிவிக்கட்டும். அவ்வாறு செய்யாமல் பா.ம.க. மீதும், பிற பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிறபடுத்தப்பட்ட சமுதாயங்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவோம் என்றால், இந்த சமுதாயத்தினரின் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்று அறிவிக்கட்டும். இதற்கு கலைஞரும் மற்ற தலைவர்களும் தயாரா? என்று அறைகூவல் விடுக்கிறேன்.

Topic: 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்