புதிய கருத்தை சேர்

காவிரி நதிநீர் : கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா விளக்கம்

சனி, 12/29/2012 - 22:04 -- Velayutham
Undefined

 

காவிரி நதிநீர் குறித்து கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளி வந்த போது, இது தமிழகத்திற்கு பாதகமானது என்று நான் அறிக்கை வெளியிட்டதாகவும், அந்த இறுதித் தீர்ப்பைத் தான் அரசிதழிலே வெளியிட வேண்டும் என்று தற்போது பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது குறித்த உண்மை நிலைமையை நான் எடுத்துரைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்ட பிறகு, 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில், காவேரி நடுவர் மன்றத்தில் தமிழகத்திற்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கறவு செய்து சாதகமான தீர்ப்பினை பெறுவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் நலன் கருதி மேற்படி நதிநீர் பங்கீடு தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசு மத்திய அரசிதழில் வெளி வரச் செய்து, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இது மட்டுமல்லாமல், 15.4.2007 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மீது உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதும் அதிமுக தான். ஆனால், தி.மு.க. சார்பில் நடுவர் மன்றத்திற்குத் தான் செல்ல வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் செல்லலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அந்தத் தீர்மானத்திற்கு அதிமுக சார்பில் உடன்பாடு இல்லை என்று எடுத்துரைக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டு விட்டால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று ஒரு வாதத்தை வைத்தவரும் கருணாநிதி தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுகவின் கருத்தினை முற்றிலும் புறக்கணித்து, முந்தைய தி.மு.க. அரசின் சார்பில் நடுவர் மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, 10.7.2007 அன்று காவேரி நடுவர் நீதிமன்றம் தமிழக அரசின் மனுவினை விசாரிக்க முடியாது என தெளிவாக தெரிவித்து கருணாநிதியின் முகத்தில் கரியை பூசியது. உண்மை நிலை இவ்வாறிருக்க, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமானது என்று நான் தெரிவித்தது போலவும், அந்தத் தீர்ப்பையே இன்று மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதுவது போலவும் உண்மையைத் திரித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதிமுகவைப் பொறுத்த வரை, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007-ல் வெளி வந்ததிலிருந்து, தமிழகத்திற்கு பாதகமாக உள்ளவற்றை உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்; இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்; காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது. நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், 14.6.2011 அன்று பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுத்தேன். மேலும் பல முறை இது குறித்து கடிதமும் எழுதியுள்ளேன்.

இத்தருணத்தில், காவேரி நதிநீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விடுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு எப்போது மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்ற வினாவினை எழுப்பி, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் 5.12.2012 அன்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞறை கேட்டுக் கொண்டது. 

இதனையடுத்து 7.12.2012 அன்று நடைபெற்ற காவேரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படும் என்றும் காவேரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் மத்திய நீர் வள அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தனது 10.12.2012 நாளைய ஆணையில் பதிவு செய்துள்ளது.  

ஆனால், மேலும் காலதாமதமாவதால், காவிரி நதிநீர் இறுதி முடிவை அரசிதழில் வெளியிட வலியுறுத்தி மேலும் பிரதமருக்கு கடிதங்கள் எழுதினேன்.  27.12.2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.

இதற்கிடையில், தான் தி.மு.க.-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமரை சந்திக்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் அவர்களும் பிரதமரை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் போது காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உண்மையிலேயே வலியுறுத்தினார்களா? அல்லது கேட்பது போல் ஒரு கபட நாடகமாடி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டனரா என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஏனெனில், தி.மு.க. வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையிலேயே காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தால் அந்த கோரிக்கை எழுத்துப்பூர்வமானதாக இருந்திருக்க வேண்டும்.  உண்மையிலேயே எழுத்துப்பூர்வமாக இந்தக் கோரிக்கையை வைத்திருந்தால் அதனை ஊடகங்களுக்கு கருணாநிதி வெளியிட்டிருக்க வேண்டும்.  ஆனால், இன்று வரை வெளியிடவில்லை. 

எனவே, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை வெளியிடக் கூடாது என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து வாய்மொழியாக வலியுறுத்தி சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் பலமாக எழுந்துள்ளது.

எது எப்படியோ, உபகாரம் செய்கிறேன் என்று சொல்லி உபத்திரவம் அளிக்க வேண்டாம் என்று கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துவதோடு, இந்த விஷயத்தில் கருணாநிதி வாய் திறக்காமல் இருந்தாலே அது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் தொண்டாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் முன்பு அளித்த வாக்குறுதியை மனதில் கொண்டு, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிடவும், காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்