புதிய கருத்தை சேர்

தமிழக சுகாதார துறையில் நவீன தொழில்நுட்பம்.

புத, 11/19/2014 - 23:29 -- Velayutham
தமிழ்
சென்னை நவ 20.
சுகாதார துறையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துவதை உலக சுகாதார நிறுவன இந்திய பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
உலக சுகாதார நிறுவனம் சார்பில் சென்னையில் நான்கு மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநிலங்களுக்கான இலவச மருந்துகள் திட்டம் குறித்த 3 நாள் மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது
 
தமிழ்நாடு அரசு மக்களுக்கு தரமான மருந்துகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் சுகாதாரமான மாநிலத்தை உருவாக்கி வருகிறது.  சாதாரன மனிதனுக்கும் மேம்பட்ட  சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ் நாடு இந்தியாவிலேயே ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.  தற்சமயம் குழந்தை இறப்பு விகிதம் 21ஆக உள்ளது. இது தேசிய அளவான 1000க்கு 40 என்பதைவிட பாதி அளவாகும்.  பேறுகால தாய்மார்கள்  இறப்பு விகிதம் 68 ஆகும்.  இது இந்திய அளவான 1 லட்சம் பிறப்பிற்கு 178 என்பதை விட குறைவாகும்.  இச்சாதனைகளை மத்திய திட்டக்குழு மற்றும் பல நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.
இலவச மருந்துகளை மக்களுக்கு வழங்குவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்படும் மிகவும் விலை உயர்ந்த சைக்ளோப்பிரின் போன்ற மருந்துகள் கூட தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது . மாநிலம் முழுவதும் நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் 6,00,000 புற நோயாளிகளும், 80,000 உள் நோயாளிகளும் பயன் பெறுகின்றனர்.
ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் நல்வாழ்வு துறைகளுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஆலோசனைகளை வழங்கும் பணியையும் செய்கின்றது.
·
இவ்வாறு அவர் பேசினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே பேசியதாவது
 
சென்னையில் நடைபெறும் நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.  இலவச மருந்துகள் வழங்குவது தொடர்பாக நடைபெறும் இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்திட தேர்வு செய்யதது எதேச்சையான நிகழ்வு அல்ல.  இதற்கு காரணம் மக்களுக்கு மருத்துவ திட்டங்களை செயல்படுத்துவதிலும், இலவச மருந்துகள் வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னோடியாகவும், மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. எனவேதான் இம்மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டோம்.  பிற மாநிலங்கள் தமிழ்நாட்டின் சிறந்த அனுபவத்தையும், சாதனைகளையும்  பின்பற்றி, இலவச மருந்துகளை மக்களுக்கு வழங்குவதில் சிறப்பாக செயல்பட இது உதவும்.
இந்நிலையில் சிசு இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், பிரசவத்தின் பொழுது இறப்பு விகிதத்தை குறைப்பதிலும் மில்லினம் வளர்ச்சி இலக்கை  எய்துவதிலும், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.  தமிழ்நாட்டின்  வெற்றியையும் அனுபவத்தையும் மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்.
சுகாதார முறைகளில் அரசு எடுத்துள்ள பல்வேறு முறையான நடவடிக்கைகள், மருத்துவத்துறை நிபுணர்களுக்கான வசதிகள், மருத்துவத்தை நாடும் மக்களுக்கு தரமான சிகிச்சை, மருந்துகள் வழங்குதல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்நாடு சிறப்பாக செய்து வருகிறது. அவசரகால பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் துவக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் தாய்மார்களை காப்பற்றுவது பாராட்டிற்குரியது.  இம்மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் சுகாதார பணிகளை உலக சுகாதார நிறுவனம் மிகவும் பாராட்டுகிறது.
தமிழகம் சுகாதார துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். மாநிலத்தின் அனைத்து சிறப்பு முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். புதிய மருத்துவமனைகளை தோற்றுவிப்பதின் மூலம் தமிழக அரசு மக்களுக்கு மருத்துவ வசதிகளை உறுதிபடுத்தியுள்ளது.  இந்நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் என்றும் உறுதுனையாக இருக்கும். இவ்வாறு  பேசினார்.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்