புதிய கருத்தை சேர்

5 தமிழக மீனவர்கள் விடுதலை

புத, 11/19/2014 - 23:29 -- Velayutham
Undefined
 
ஹெராயின் கடத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
 
அவர்கள் 5 பேரும் வியாழக்கிழமை (நவ.20) அல்லது வெள்ளிக்கிழமை (நவ.21) நாடு திரும்புவார்கள் என இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கை கடல் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், பி.அகஸ்டஸ், ஆர்.வில்சன், கே. பிரசாத், ஜே. லாங்லேட் ஆகியோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 5 பேருக்கு எதிராகவும், ஹெராயின் கடத்தியதாக இலங்கை அதிகாரிகளால் வழக்குத் தொடுக்கப்பட்டது.
 
இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து, 5 பேருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 தமிழக மீனவர்களையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.
 
இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தூதரகம் சார்பில் கடந்த 11ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தொலைபேசியில் பேசினார். அப்போது, 5 தமிழக மீனவர்களையும் இந்தியாவுக்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆராய்வதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜபட்ச உறுதி அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
 
இந்நிலையில், இலங்கை வெலிகடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 தமிழக மீனவர்களும் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் என்ற முறையில் தனக்குள்ள மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராஜபட்ச மன்னிப்பு அளித்ததால் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் தகவலை ராஜபட்சவின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்தார்.
 
இதுகுறித்து இலங்கை சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக, 5 பேரும் குடியேற்றத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.
 
ராஜபட்சக்கு இந்தியத் தூதர் நன்றி: 5 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டதற்கு, ராஜபட்சவுக்கு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும், இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹாவும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து, இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் கடந்த மாதம் 30ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய (தமிழக) மீனவர்கள் 5 பேரும், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பதை உறுதி செய்கிறோம்.
 
மனிதாபிமான அடிப்படையில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
 
அவரது நடவடிக்கையால், இந்தியா-இலங்கை இடையிலான பன்முகத்தன்மைக் கொண்ட உறவு மேலும் வலுப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களையும், இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "5 பேரையும் விரைவில் தாயகத்துக்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை இந்தியத் தூதரகம் எடுத்து வருகிறது' என்றார்.
 
குடியேற்றத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும், இந்தியத் தூதரகம் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டுவிட்டதாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவுக்கு திரும்புவதற்குத் தேவையான ஆவணங்கள் கொடுக்கப்பட்ட பிறகு, 5 பேரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நாடு திரும்புவார்கள் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும், சார்க் எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, நேபாளத்தில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடியும், ராஜபட்சவும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், 5 தமிழக மீனவர்களையும் இலங்கை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்