சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்கு 2262 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயி, 09/30/2012 - 15:20 -- Reporter

சென்னை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் பல்வேறு கட்டமைப்புகளில், சாலை உட்கட்டமைப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழில்,  போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளின் வேகமான வளர்ச்சிக்கு சாலை கட்டமைப்பின் வளர்ச்சி அடிப்படையாக உள்ளது.  ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சாலை இணைப்பு வசதி முக்கியமான ஒன்றாக அமைகிறது.  ஒரு மாநிலத்தில் உள்ள ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பினைக் கொண்டே அம்மாநிலத்தின் வளர்ச்சியைக் கணிக்க இயலும்.  மாநிலத்தின் தற்போதைய சாலை கட்டமைப்பு மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான பல்வேறு திட்டங்களை  தமிழக முதலமைச்சர்
 ஜெயலலிதா  தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.        
அந்த வகையில், 3,793 கோடி ரூபாய் மதிப்பில் புதுச் சாலைகள் மற்றும்
புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரிப்பதற்கும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்த ஆண்டு, 340.68 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் மேம்பாலங்கள், பாலங்கள்,
சுரங்க நடைபாதைகள், ஆகாய நடைபாதை ஆகியவற்றை அமைக்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக 2262 கோடியே
50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக முதலமைச்சர்
 ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.
இதில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் 248 கி.மீ. நீள இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகளை இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள்,  895 கி.மீ நீள சாலைகளின்  கட்டமைப்பின் தரம் மற்றும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள்,
நில ஆர்ஜித பணிகள், 27 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் புதுப்பிக்கும் பணிகள்  என
397 பணிகளுக்காக 903.80 கோடி ரூபாயும்,
895 கி.மீ. நீள ஒரு வழித்தட மாவட்ட முக்கிய சாலைகளை இடைவழித் தடமாக அகலப்படுத்தும் பணிகள், 531 கி.மீ.
நீள மாவட்ட முக்கிய சாலை கட்டமைப்பின் தரம் மற்றும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துதல்,  22 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் உட்பட 433 பணிகளுக்காக 818.72 கோடி ரூபாயும், 1639 கீ.மீ. நீள மாவட்ட இதரச் சாலைகளை உறுதிப்படுத்தும்  பணிகள், 36 பாலங்கள் மற்றும் சிறு பாலங்களை சீரமைக்கும் பணிகள் என
367 பணிகளுக்காக 224.02 கோடி ரூபாயும்,  40 விழுக்காட்டிற்கு மேல் ஆதி திராவிட மக்கள் வாழும் கிராமங்களில் சாலைகள், பாலங்கள் அமைக்கும் பணிகள் உட்பட
483 பணிகளுக்காக 315.95 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த பணிகளுள் சென்னை நகரத்தின் முக்கிய சாலைகளை உலக தரத்திற்கு உயர்த்திடும் பணிகளும், விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலம், கோயம்பேட்டில் உள்ள மேம்பாலம், கத்திபாராவில் உள்ள மேம்பாலம், ஆகியவைகளில் பசுமைநிற பூங்காக்கள் அமைத்து  அழகுபடுத்தும் பணிகளும், அண்ணா சாலையில்  அண்ணா சிலை அருகில் உள்ள சுரங்கப்பாதை, சாந்தி திரை அரங்கம் அருகில் உள்ள சுரங்கப்பாதை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை ஆகியவைகளை அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், சாலைகள்  மேம்பாடு அடைவதுடன், வாகனங்களின் சீரான பயணத்திற்கும், பயண நேரம் குறைவதற்கும் வழிவகை ஏற்படும்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்