அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள், 10/05/2012 - 14:38 -- Reporter

சென்னை

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை

""""மக்களை நாடி அரசு"" என்ற கொள்கையின் அடிப்படையில்  செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனது தலைமையிலான அரசின் திட்டங்களையும், உதவிகளையும் நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கினை
வகிப்பவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.  அரசு இயந்திரத்தின் முதுகெலும்பாக விளங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை அவர்களுக்கு எனது தலைமையிலான அரசு வழங்கி வருகின்றது.
தற்போது, 1.7.2012 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் அடிப்படையில், 1.7.2012 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்று, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும் 1.7.2012 முதல் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். இந்த ஏழு விழுக்காடு அகவிலைப்படி உயர்வு 1.7.2012 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்கள்; எழுத்தர்கள்; மற்றும் வழக்கமாக அகவிலைப்படி பெறும் அனைவருக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார்
18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,443 கோடியே 52 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களை மேலும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்