திராவிடர் இயக்கத்தை யாராலும் அழித்து விட முடியாது :கருணாநிதி

வியா, 10/25/2012 - 21:30 -- Reporter
சென்னை
திராவிடர் இயக்கத்தை யாராலும் அழித்து விட முடியாது என கருணாநிதி பேசினார்
திருமங்கலம் கோபால் இல்ல மணவிழாவில் கருணாநிதி கலந்து கொண்டு ஆற்றிய உரை. என்ன பேசுவது என்று தெரியாத ஒரு நிலையில், இந்த நிகழ்ச்சியிலே நான்அமர்ந்திருக்கிறேன்.

இந்த இயக்கத்தை இன்றைக்குக் கட்டிக்காத்து, அது பார் புகழும் இயக்கங்களிலே ஒன்றாக மிளிர்வதற்குக் காரணம், இயக்கத்தினுடைய தலைவர்களோ, பெரும் பொறுப்புக்களில் இருந்தவர்களோ அல்லது அமைச்சர் பதவிகளிலே இருந்தவர்களோ அல்ல. யாரால் இந்த இயக்கத்திற்கு இவ்வளவு பேரும் புகழும் ஏற்பட்டுள்ளது என்று எண்ணிப் பார்த்தால், திருமங்கலம் கோபாலைப் போன்ற செயல்வீரர்களால் தான், தொண்டர்களால் தான். எனக்கு உற்ற துணையாக இருந்தவர் கோபால்!

தொண்டனாக - தோழனாக - எனக்கெல்லாம் உற்ற துணைவனாக இருந்த கோபாலை இழந்த அந்த நாள் - இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற மகிழ்ச்சிக்கெல்லாம் மாறாக திகழ்ந்த நாளாகும்.

அந்த நாளை என்றைக்கும் மறக்க முடியாமல் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

எத்தனையோ தலைவர்களுக்கு - பக்கத் துணையாக தொண்டர்கள் இருந்திருக்கிறார்கள், அதைப் போல ஒருவராக கோபால் இருந்ததாக நான் கருதவில்லை. என்னுடைய உடலில் ஒரு பகுதியாக - என்னுடைய உயிரில் ஒரு பகுதியாக - என்னுடைய மூச்சோடு மூச்சாக கலந்த தொண்டர்களில் ஒருவராகத் தான் - தம்பி கோபால் இருந்தார். இன்னொரு நூறாண்டுகளுக்குப் பிறகு - நான் அப்போது இருப்பேனா, இருக்க மாட்டேனா என்பது எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும்

நூறாண்டுகளுக்குப் பிறகு யாராவது வரலாறு எழுதுகின்றவர்கள், இந்தப் பகுதிக்கு ஏன் கோபாலபுரம் என்று பெயர் வந்தது என்று எழுதும்போது, ஒரு சமயம் திருமங்கலம் கோபால் வாழ்ந்த பகுதி (கைதட்டல்) என்பதால் இது கோபாலபுரம் ஆயிற்று என்றும் சொல்லலாம் என்று எழுதினால், அது நம்பக்கூடிய ஒன்றாகக் கூட அமையலாம். அந்த அளவிற்கு கோபால் இடத்திலே எனக்கு பரிவு உண்டு, பாசம் உண்டு என்பதை விட அந்த அளவிற்கு கோபால் போன்ற தொண்டர்களிடத்திலே எனக்கு - வீரமணி இருக்கிறார், தவறாக கருத மாட்டார் - “பக்தியும் உண்டு”. அப்படிப்பட்ட அந்தத் தொண்டர்களை பக்கத்திலே வைத்துக் கொண்டிருக்கின்ற எந்தத் தலைவனுக்கும் எத்தகைய தீங்கும் வராது, வந்தால் அந்தத் தீங்கை துரத்தியடிக்கக்கூடிய ஆற்றல், அந்தத் தொண்டர்களின் பலத்தினால் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற அந்த நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

திராவிடர் இயக்கத்தை - கோபாலைப் போன்ற மன உறுதி படைத்த தொண்டர்கள், காவலர்கள் இருக்கின்ற வரை - யாராலும் அழித்து விட முடியாது, வீழ்த்தி விட முடியாது என்ற அந்த உறுதியை இந்த மகிழ்ச்சிகரமான மண விழா நிகழ்ச்சியிலே நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தக் கழகத்தின் குடும்பத்திலே ஒருவரை, மூத்த தொண்டரை, பிரிந்திருந்தாலுங்கூட, அவருடைய இல்லத்திலே இந்தத் திருமண விழா நடைபெறுகின்ற நேரத்தில் நாமனை வரும் நம்முடைய இனிய வாழ்த்துக்களை கோபால் இருந்தால் எந்த அளவிற்கு உற்சாகத்தோடு நாம் வழங்குவோமோ, அதே உற்சாகத்தோடு இன்றைக்கு நம்முடைய வாழ்த்துக்களை வழங்கியிருக்கிறோம். அந்தக் குடும்பத்தினர் மேலும் பல வளங்களை, வலிமைகளைப் பெற நம்முடைய ஒத்துழைப்பு, நம்முடைய துணை இருக்குமாக என்று குறிப்பிட்டு, மணமக்கள் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் என்று கருணாநிதி பேசினார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்