சத்துணவு திட்டத்தில் புதிய உணவு வகைகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள், 11/02/2012 - 16:01 -- Reporter

சென்னை

தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டபேரவையில் அறிவித்தாவது.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை வழங்கி, அதன் மூலம் ஊட்டச்சத்து குறைவினை
அகற்றுதல்; பள்ளி செல்லும் குழந்தைகளின் விகிதத்தினை அதிகரித்தல்;
இடைநிற்றலை அகற்றல் ஆகிய நோக்கங்களை எய்தும் பொருட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1982 ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் சத்துணவுத் திட்டத்தில், பல காலமாக ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்த நான், காலத்திற்கு ஏற்பவும்,  குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், உணவு முறையில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன்.
எனது உத்தரவின் பேரில், புதிய வகை உணவு முறையினை அறிமுகப்படுத்துவது குறித்து புகழ் பெற்ற சமையற் கலைஞர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்தக் கலந்தாலோசனைக்குப் பிறகு, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியிலும்; திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலும் சோதனை முறையில் கொண்டைக்கடலை புலவு சாதம் மற்றும் மிளகுதூள் கலந்த முட்டை தயாரித்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.  இதனை பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்பது கண்டறியப்பட்டது. இது மட்டுமல்லாமல்,
13 வகையான கலவை சாதங்கள் மற்றும் 4 வகையான முட்டை மசாலாக்களை சமையல் நிபுணர்கள் தயாரித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேற்கூறிய சோதனை முறையின் அடிப்படையில், புதிய உணவு வகைகளை சத்துணவுத் திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில், திங்கட் கிழமையன்று காய்கறி பிரியாணி மற்றும் மிளகுத்தூள் முட்டையும்; செவ்வாய்க் கிழமையன்று கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி முட்டை மசாலாவும்; புதன் கிழமையன்று தக்காளி சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டையும்; வியாழக் கிழமையன்று சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையும்; வெள்ளிக் கிழமை அன்று கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், முட்டை மசாலா மற்றும் மிளகாய் பொடியில் வறுத்த உருளைக்கிழங்கு ஆகியவை வழங்கப்படும்.
மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில், திங்கட் கிழமை அன்று சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம், தக்காளி முட்டை மசாலாவும்; செவ்வாய்க் கிழமை அன்று மீல் மேக்கர், காய்கறி கலவை சாதம், மற்றும் மிளகுத் தூள் முட்டையும்; புதன் கிழமை அன்று புளியோதரை மற்றும் தக்காளி முட்டை மசாலாவும்; வியாழக் கிழமை அன்று எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா மற்றும் சுண்டலும்; வெள்ளிக் கிழமை அன்று சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொரியலும் வழங்கப்படும்.
இதே போன்று, அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளின் சிறப்பம்சம் மற்றும் செரிமான திறன் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்படி, திங்கட் கிழமை அன்று தக்காளி சாதம், வேகவைத்த முட்டையும்; செவ்வாய்க் கிழமை அன்று கலவை சாதம் மற்றும் சுண்டலும்; புதன் கிழமை அன்று காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டையும்; வியாழக் கிழமை அன்று எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டையும்; வெள்ளிக் கிழமை அன்று பருப்பு சாதம், வேகவைத்த உருளைக்கிழங்கும்; சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கலவை சாதமும் வழங்கப்படும்.
மேற்கூறப்பட்ட புதிய உணவு வகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலில் ஒரு வட்டாரத்தில் மட்டும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு; அந்த வட்டாரத்தில் இந்தப் புதிய உணவு முறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பிறகு, மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை கல்வி பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையையும்; அவர்களின் ஊட்டச்சத்து நிலையையும் மேம்படுத்த வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்