மருத்துவக் கல்லூரி தேர்வு முறை : கி. வீரமணி அறிக்கை

வியா, 11/08/2012 - 13:08 -- Reporter

 சென்னை

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை 

மருத்துவக் கல்லூரிக்கான பட்டப் படிப்பில் ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளார்கள்.

முதலாண்டு தேர்வில் தோல்வியுறும் மருத்துவ மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல முடியாது முதலாண்டு தேர்வில் வெற்றி பெற்ற பிறகே இரண்டாம் ஆண்டிற்குச் சென்று படிக்க இயலும் என்பது முற்றிலும் தவறான - மோசமான ஒரு முடிவாகும். முதலாண்டு தேர்வில் சில பாடங்கள், இரண்டாம் ஆண்டில் வேறு சில பாடங்கள் என்று பகுத்து வைத்து மொத்தம் அய்ந்து, அய்ந்தரை ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பை முடிக்க மாணவ, மாணவியர் செலவழிக்கின்றனர். பெற்றோர்கள்மீதும் சுமை! முதலாண்டு தேர்வில் தோல்வியுற்றாலும் இரண்டாம் ஆண்டுக்குச் செல்லும் அவர்கள் அந்த நிலுவை (Arrears)யையும் சேர்த்து எழுதி, வெற்றி வாய்ப்புகளைப் பெறமுடியும். இப்படி அய்ந்து, அய்ந்தரை (அ) ஆறு ஆண்டுகள் (House Surgeon போன்ற பயிற்சி உள்பட) ஆகும் நிலையில், மேலும் ஓராண்டை அவர்கள் - சில பாடங்களில் தோல்வி அடைய நேரிடும்போது, இழக்கும் நிலை என்பது தேவையற்ற சுமையை அவர்கள்மீது மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்கள்மீதும் சுமத்தும் ஒரு சமூக அநீதியாகும்! ‘நன்கு படிக்காதவர்களையெல்லாம் தேர்வு செய்து மேல் வகுப்புக்கு அனுப்புங்கள்’ என்பது நமது வாதமல்ல; தேவையற்று ஓராண்டை அவர்கள் இழந்தால், படிக்கவேண்டிய காலம் நீடித்தால், அதனால் மாணவர்கள் மனஉளைச்சல் ஒரு பக்கம்; விடுதிக் கட்டணம் உள்பட அதிகம் செலுத்தும் பாரத்தை பெற்றோர்கள்மீது சுமத்தும் நிர்ப்பந்தத்தை அவர்கள்மீது ஏற்றும் நிலையும் வந்துவிடுமே! ஏழை - எளிய - கிராமப்புற மக்களைப் பாதிக்கும் கல்லூரிப் படிப்பில் முதலாண்டில் தேர்வு என்பது, அனுபவ ரீதியாகப் பார்த்தால், மாணவர்கள் தக்க புரிந்துணர்வு கொள்ளக்கூட வாய்ப்பற்ற காலமாகவும் கற்பதில்கூட இரண்டாமாண்டு முதல்தான் அவர்கள் தக்கதோர் பக்குவத்தோடு, பாடங்களை உள்வாங்கும் பெரும்பாலும் ஏற்பட முடியும்.
இப்போதுதான் ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் முதல் அல்லது இரண்டாம் தலைமுறையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவியர் மருத்துவக் கல்லூரிக்கு வந்து படிக்கத் தொடங்கியுள்ளனர்.மதிப்பெண் போடுவதில் குறைபாடே கிடையாதா? மேலும், ‘‘மதிப்பெண்கள் அப்படியே துல்லியமாக, துலாக்கோலில் நிறுத்திப் போடுகிறார்கள்; இவர்கள் மதிப்பீட்டில் குறைகளே காண முடியாது’’ என்று தேர்வு நடத்துவோர் அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியுமா?
நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட சிற்சில நேரங்களில் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாமல் தோல்வி அடையும் நிலைகூட உண்டு. பல காரணங்களால்.எனவே, இந்த முறையை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
பொறியியல் கல்லூரிகளில் இல்லாத நடைமுறை!
பொறியியல் (பி.இ.) பட்டப் படிப்பில் நான்காண்டு அதில் செமஸ்டர் முறையில் தேர்வில் முதல் ஆண்டு,இரண்டாம் ஆண்டில் தோல்வி அடைந்தால்கூட, மேல் வகுப்புக்குச் செல்வது நிறுத்தப்படுவது கிடையாது. கூடுதலாகத் தேர்வு எழுதி, தங்களது பாக்கி பாடத் தோல்விகளைச் சரி செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கும் முறைதானே தற்போது உள்ளது- அது எப்படி தவறு என்று கூற முடியும்? மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் ஏன் புதிய அணுகுமுறை? மருத்துவர்களின் தேவை நாட்டில் இன்னும் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை.
சமுதாயத்திற்கு டாக்டர்கள் தேவைப்படும்போது அவர்களை மேலும் படிப்பின் கால அளவை நீட்டினால்,அது தேசிய விரயம் - தேசிய குற்றம் ஆகாதா? பொதுமக்கள் நலக்கண்ணோட்டத்தோடு இதனைப்பார்த்தாலும், இம்முறையை நியாயப்படுத்த முடியாது!
தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆறு மாதமல்ல - வெறும் ஆறு வாரம்தான் என்று எளிதாக்கப்பட்டுள்ளது.குஜராத்தில் உயர்நீதிமன்றம் சென்று தீர்ப்பும் பெறப்பட்டுள்ளது. முதலாண்டு தோல்வி அடைந்தாலும், அடுத்த ஆண்டு படிப்பைத் தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இவற்றையெல்லாம் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகமும், தமிழ்நாடு அரசும் கணக்கில் எடுத்துக் கொள்வது நல்லது!பழைய முறையே தேவை!
எனவே, மருத்துவக் கல்லூரி நிபுணர்கள், கல்வி அறிஞர்கள்  இதனைக் கருத்தில் எடுத்துக்கொண்டு,
தேவையில்லாமல் மருத்துவ மாணவர்களை, அவர்களது பெற்றோர்களைத் தண்டிக்கும் கொடுமையை மாற்றி, பழைய முறைப்படி, அதாவது முதலாண்டு தேர்வில் (சில பாடங்களில்) தோல்வி அடைந்தாலும், இரண்டாம் ஆண்டுக்கு அனுப்பி, நிலுவையில் இருப்பதற்குத் தேர்வு எழுதிட ஒரு சில மாதங்களிலேயே அவர்களுக்கு வாய்ப்பு அளித்து வெற்றி பெறும் வாய்ப்பை நல்குவது நியாயமும், மனிதநேயமும் கொண்ட ஒன்றாகும்.
பாடப் பிரிவுகளில் 50 மதிப்பெண்ணா?

தமிழக அரசும் இதில் தலையிட்டு, இந்த மாற்றத்தை ரத்து செய்ய, தக்க முயற்சிகளை
எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 50 மதிப்பெண் வாங்கவேண்டும் என்பதும் தேவையற்றது. ஏற்கெனவே இருந்த
50 மதிப்பெண்கள் (Aggregated) என்ற முறை நீடிக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்