அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு “ஸ்மார்ட் கார்டு”

சனி, 11/24/2012 - 21:28 -- Reporter

சென்னை நவ. 24:-
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு,


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு “ஸ்மார்ட் கார்டு” வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு வழங்கினார்கள். பள்ளிக் கல்வித்துறைக்கென கல்வி தகவல் மேலாண்மை முறைமையினை ( EMIS) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 5.9.2012 அன்று துவக்கி வைத்தார்கள். இந்த கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் நான்கு இணைய தளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதில், www.admin.tnshchools.gov.in என்ற இணையதளம் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் இணையதளம் ஆகும். இந்த இணையதளத்தில் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு பாதுகாக்கபட்டுள்ளது.

மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு “ஸ்மார்ட் கார்டு” வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செந்துறை - அரசு மேல்நிலைப் பள்ளி, அய்லாப்பேட்டை - அரசு மேல்நிலைப்பள்ளி, சோமரசம் பேட்டை - அரசு மேல்நிலைப் பள்ளி, எட்டரை - அரசு மேல்நிலைப்பள்ளி, இனாம் குளத்தூர் ஆகிய ஐந்து மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில் ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இந்த ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் (EMIS) ஒருங்கிணைக்கப்படும்.

இந்த ஸ்மார்ட் கார்டு மூலம், மாணவ, மாணவியர்களின் பெயர், பெற்றோர் முகவரி, பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், மாணவ, மாணவிகள் குடும்பச் சூழ்நிலைக் காரணமாக இடம்பெயர நேரும்போது இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும். மேலும், மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாகக் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கை செய்திட வழிவகை செய்யப்படுவதுடன் அரசு வழங்கும் நலத் திட்டங்களுக்கு மாணவ, மாணவியர்களை தெரிவு செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் 91,54,741 மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள். மேலும், மாணவ, மாணவியர்களின் உடல்நலம் குறித்த விவரங்களை பதிவு செய்யும்Health Card  உடன் “ஸ்மார்ட் கார்டு” ஒருங்கிணைக்கப்படும். இத்திட்டம் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 2011-12ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ள 4,60,779 மாணவ, மாணவியருக்கு முதிர்ச்சியடைந்த சிறப்பு ஊக்கத் தொகையினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்கள். மாணவர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, 2011 – 12ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு 1500 ரூபாயும், 12ஆம் வகுப்பு மாணவ,
மாணவியருக்கு 2,000 ரூபாயும் அவர்களின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் போது வட்டியுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 2011-12ஆம் கல்வியாண்டில் 21 லட்சத்து 36 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 313 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2012-13ஆம் கல்வி ஆண்டில் 21,52,986 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 353 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் வருமானம் ஈட்டும் தாய் தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அப்பெற்றோர்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவிற்காக ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிரந்தர வைப்பு நிதியாக வழங்கப்படும் என்ற திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2012-13ஆம் கல்வியாண்டுகளில் 720 மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான வைப்பு நிதி பத்திரங்களை மாணவ, மாணவியருக்கு வழங்கினார்கள்.

இந்த நிதியானது அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவற்றை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி மற்றும் பராமரிப்புச் செலவினை மேற்கொள்ள உதவியாக இருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில், மாணவர்கள் நலன் கருதியும், கல்வி தரத்தை மேம்படுத்திடவும், சிறப்பான நிருவாகத்தை வழங்கிடவும் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் ஆய்வுப் பணிகள், தேர்வுப் பணிகள், பள்ளிகளைப் பார்வையிடுதல் மற்றும் திட்டப் பணிகளைக் கண்காணித்தல் போன்ற பணிகளை தடையின்றி சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 6 புதிய வாகனங்களும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு 9 புதிய வாகனங்களும், என மொத்தம் 83 லட்சத்து 460 ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 15 புதிய வாகனங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டுகள், இளைஞர் நலன், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
*

Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்