காவிரிநீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபின் தமிழக அரசு அவசர ஆலோசனை கூட்டம்

புத, 12/05/2012 - 20:39 -- Puthiyavan

சென்னை டிச. 5:- தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் காவேரி நதியிலிருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு விநாடிக்கு 10,0000 கன அடி தண்ணீரை கர்நாடகா விடுவிக்கவேண்டும என்ற உச்சநீதிமன்றதின் தீர்ப்பு தமிழகத்திற்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் இந்த தண்ணீரை வைத்து சம்பா பயிரை முற்றிலும் காப்பாத்த இயலாது என்பதால் சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கான வேறு வழிமுறைகள் குறித்து ஆராய ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின்  அறிக்கை – 5.12.2012

காவேரி நீரைப் பயன்படுத்துவதில் தமிழகத்திற்குள்ள உரிமை  120 ஆண்டுகளுக்கு முன்பு இரு மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், அந்த ஒப்பந்தத்தையும், அதற்குப்பின்  1924  ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் முற்றிலும் பின்பற்றாமல்,நீர்த்தேக்கங்களை கர்நாடகா தன்னிச்சையாக கட்டியதன் காரணமாகவும், பாசனப்பரப்பை பெருக்கிக் கொண்டே சென்றதன்  காரணமாகவும், கோடைப் பாசனத்திற்குகாவேரி நீரை பயன்படுத்துவதன் காரணமாகவும் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவேரி நீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.   நடப்பாண்டில் கர்நாடகா தனது கோடைப் பாசனத்திற்கு தனது நான்கு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீரை விடுவித்தவுடன், இதனை தடை செய்ய வேண்டும்என்றும், கர்நாடக அரசின் இது போன்ற நடவடிக்கை தமிழ்நாட்டின் குறுவை சாகுபடியை பாதிக்கும் என்றும் தெரிவித்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 21.3.2012 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.  இது மட்டுமல்லாமல், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, குறுவைபாசனத்திற்கு மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டிய நீர்வரத்து கணிசமாக குறையும் என்று கோடிட்டுக் காட்டி, காவேரி நதிநீர் ஆணையக் கூட்டத்தினை விரைந்து கூட்டவேண்டும் என்று பாரதப் பிரதமருக்கு  18.5.2012 அன்று நான் கடிதம் ஒன்றினைஎழுதினேன்.   இது குறித்து, பாரதப் பிரதமரிடம் இருந்து எந்தப் பதிலும் வராத சூழ்நிலையில்,விகிதாச்சாரபடியான அளவில்  தமிழ்நாட்டுடன் நீரைப் பகிர்ந்து கொள்ள கர்நாடக அரசிற்கு உத்தரவிடக் கோரியும், காவேரி கண்காணிப்புக் குழுவினால் இறுதி செய்யப்பட்டுள்ள இடர்ப்பாடு பங்கீட்டு முறைக்கு ஒப்புதல் வழங்கும் வகையில், காவேரி நதிநீர் ஆணையக் கூட்டத்தினை  கூட்ட உத்தரவிடக் கோரியும்,  21.7.2012 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஓர் இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  எனது தொடர் வலியுறுத்தல் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக,காவேரி நதிநீர் ஆணையக் கூட்டத்தினை பாரதப் பிரதமர் அவர்கள் 19.9.2012 அன்று கூட்டினார். அந்தக் கூட்டத்தில், இடர்ப்பாடு பங்கீட்டு முறையின்படி ஏற்பட்ட குறைபாட்டு நீரான  48 டி.எம்.சி. அடி தண்ணீரை ஒரு நாளைக்கு  2  டி.எம்.சி. அடி தண்ணீர் வீதம்  24  நாட்களுக்கு திறந்துவிடவும், அதன் பின்னர் காவேரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையின்படி சம்பா சாகுபடிக்கு தண்ணீரை  தொடர்ந்து திறந்துவிடவும் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நான் கேட்டுக் கொண்டேன். எனது  இக்கோரிக்கையை கர்நாடகா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில், 20.9.2012 முதல் 15.10.2012 வரை நாள் ஒன்றிற்கு 9,000 கன அடி நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் நீர் விடுவிப்பது குறித்து காவேரி கண்காணிப்புக் குழு முடிவெடுக்கும் என்றும் பாரதப் பிரதமர் அவர்கள் அறிவித்தார்.  இதனை ஏற்க மறுத்து கர்நாடகா முதல்வரும் அவரது குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.  இதனைத் தொடர்ந்து, ஒரு நாளைக்கு  2 டி.எம்.சி. அடி தண்ணீர் வீதம்  24 நாட்களுக்கு  48 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம்,காவேரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான  பாரதப் பிரதமர் பிறப்பித்த உத்தரவினை செயல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி  29.9.2012 அன்று தண்ணீரை விடுவித்த கர்நாடகம்,  8.10.2012 அன்று தண்ணீர் விடுவிப்பதை திடீரென்று நிறுத்திவிட்டது.  இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்டது.   இந்தச் சூழ்நிலையில், காவேரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம்  11.10.2012 அன்று நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில், காவேரி கண்காணிப்புக் குழு, 16.10.2012 முதல்  31.10.2012 வரையிலான காலத்திற்கு  8.85 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.   தமிழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு  30.10.2012 அன்று உச்சநீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, தமிழக அரசின் மனு குறித்து பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய காவேரி கண்காணிப்புக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.   உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து,  31.10.2012 அன்று நடைபெற்ற காவேரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த பின், 16.10.2012 முதல் 31.10.2012 வரையிலான காலத்திற்கு கர்நாடகா திறந்துவிடவேண்டிய 8.85 டி.எம்.சி. அடி நீரில் உள்ள பற்றாக்குறை அளவான 2.15 டி.எம்.சி. அடி நீரை 4.11.2012-க்குள் திறந்துவிட வேண்டும் என்றும், 1.11.2012 முதல் 15.11.2012 வரையிலான காலத்திற்கு 3.94 டி.எம்.சி. அடி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்றும் ஆணைப் பிறப்பித்து, அடுத்த கூட்டத்தை  15.11.2012 தேதிக்கு காவேரி கண்காணிப்புக் குழு ஒத்தி வைத்தது.   இதனையடுத்து,  15.11.2012 அன்று கூடிய கூட்டத்தில்,  16.11.2012 முதல் 30.11.2012 வரையிலான காலத்திற்கு  4.81 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை  26.11.2012 அன்று நடைபெற்ற போது, இருமாநில விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சனை குறித்து இருமாநில முதலமைச்சர்களும் சந்தித்து ஒரு தீர்வு காண வேண்டும் என்ற ஆலோசனையை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.  உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்று,  29.11.2012 அன்று நான் பெங்களூருக்குச் சென்று கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேச்சு வார்த்தைநடத்தினேன். அந்தப் பேச்சு வார்த்தையின்  போது, இடர்ப்பாடு பங்கீட்டு முறையின்படி,மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டிய நீரில்  53.4 டி.எம்.சி. அடி தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்று தெரிவித்து, தமிழக விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு, சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக அடுத்த  15 நாட்களுக்கு  30  டி.எம்.சி. அடி தண்ணீரை திறந்து விடுமாறும், மீதமுள்ள  23.4 டி.எம்.சி. அடி தண்ணீரை டிசம்பர் மாத இறுதிக்குள் திறந்துவிடுமாறும் தமிழகத்தின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால், கர்நாடக முதலமைச்சரோ ஒரு சொட்டு நீர் கூட தர இயலாது என்று தெரிவித்தார். இதனையடுத்து கர்நாடக முதலமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.  இரு மாநில முதலமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த சூழ்நிலையில், காவேரி நதிநீர் தொடர்பான வழக்கு  30.11.2012, 3.12.2012, 4.12.2012 மற்றும்  5.12.2012 ஆகிய நாட்களில் உச்ச நீதிமன்றம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைகளின் போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இன்று  (5.12.2012) முதல் காவேரி கண்காணிப்புக்குழுவின் அடுத்தக் கூட்டம் நடைபெறும் வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும், மேற்கொண்டு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து காவேரி கண்காணிப்புக் குழு கூடி முடிவு செய்ய வேண்டும் என்றும், இதனை 9.12.2012 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கினை  10.12.2012 தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.  காவேரி நதியிலிருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீரை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், இந்தத் தண்ணீரை வைத்து சம்பா பயிரை முற்றிலும் காப்பாற்ற இயலாது என்பதால், சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கான வேறு வழிமுறைகள் குறித்து ஆராய இன்று தலைமைச்செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நிதி  அமைச்சர், மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், மாண்புமிகு வீட்டு வசதித் துறை அமைச்சர், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர், நிதித் துறை செயலாளர், பொதுப் பணித் துறை செயலாளர், வேளாண்மைத் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்றும் வகையில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். 1.  சம்பா பயிரை காப்பாற்றிட, டெல்டா பகுதிகளில் உள்ள மின்சார பம்பு செட்டுகளை இயக்கி நிலத்தடி நீரை பயன்படுத்துவது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, எனது உத்தரவின் பேரில் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு  29.11.2012 முதல் பகலில்  6 மணி நேரம், இரவில்  6 மணி நேரம் என ஒரு நாளைக்கு  12 மணி நேரத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மும்முனை மின்சாரம் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  வரை வழங்கப்படும்.  2.  இதே போன்று,  டெல்டா பகுதிகளில் உள்ள சுமார் 32,000 டீசல் பம்பு செட்டுகளை பயன்படுத்தி மேற்பரப்பில் உள்ள நீரினை விவசாய நிலங்களுக்கு எடுத்துச் செல்லும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், டீசல் மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு 600 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதற்கென 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.   3.  பிரதான வாய்க்காலில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் போது ஏற்படும் நீர் இழப்பை தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு அலகிலும்  180 மீட்டர் நீளமுள்ள  ழனுஞநு  பைப்புகள் வாங்குவதற்காக  100 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.  அலகு ஒன்றுக்கு 20,000 ரூபாய் வீதம் 6,000 அலகுகளுக்கு இந்த மானியம் வழங்கப்படும். இதற்கென 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 4.  இதே போன்று, ஒவ்வொரு அலகிலும்  100 மீட்டர் நீளமுள்ள வளையக்கூடிய குழாய்கள் வாங்குவதற்காக  100 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.  அலகு ஒன்றுக்கு  2,800 ரூபாய் வீதம்  6,000 அலகுகளுக்கு இந்த மானியம்வழங்கப்படும். இதற்கென 1 கோடியே 68 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.  5.  இது மட்டுமல்லாமல், உலர்ந்து போகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில்,  300 பல்வகை நீர்த் தெளிப்பான்கள் (Multi Purpose Boom Sprayer) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் வாங்கப்படும். இதற்கென ஒரு கோடியே  20  லட்சம்  ரூபாய்  நிதி ஒதுக்கீடுசெய்யப்படும். இது மட்டுமல்லாமல், இயக்கச் செலவிற்காக  3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்தப் பணிகள் வேளாண் துறை மூலம் மேற்கொள்ளப்படும்.   6.  மேலும்,  7 முதல்  10  நாட்கள் வரை வறட்சியை தாங்கக்கூடிய வகையில்,   MOP உரம் மற்றும் Pink Pigmented Facultative Methylotroph  ஆகியவற்றை தேவைக்கேற்ப பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மீது தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென  4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  இந்தப்பணியும் வேளாண் துறை மூலம் மேற்கொள்ளப்படும். 7.  தண்ணீரின் தேவையை குறைக்கும் வகையில்,  500 சிறிய நடமாடும் தெளிப்பான்கள் (Mini Portable Sprinkler) வாங்கப்படும். இதற்கென 2 கோடியே 25  லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.    இந்தத்  தெளிப்புப்  பணிகள் வேளாண் துறை மூலம் மேற்கொள்ளப்படும்.  8. சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு முன் எப்போதும் கடைபிடிக்கப்படாத இது போன்ற புதிய உத்திகளை விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில், இது குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைப்பதற்காக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.  இதற்கென 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  9.  கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வேலை வாய்ப்பினை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் போதிய வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 10.  வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரையில் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு, அரசின் இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் பயிர் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் மற்றும் திருத்தப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டுத் திட்டங்களுக்காக காவேரி டெல்டா விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணத்தை அரசே செலுத்தும். இதன் மூலம் காவேரி டெல்டா விவசாயிகள் அனைவருக்கும் விவசாய காப்பீட்டு வசதி ஏற்படுத்தப்படும். இதற்கென சுமார் 30 கோடி ரூபாய் செலவு ஏற்படும். பயிர் இழப்பு ஏற்பட்டால், மேற்படி காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் ஏக்கருக்கு  8,692 ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும். இது தவிர, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் தற்போது நெற் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு வழங்கப்படும்  4,000 ரூபாயை  5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.எனவே, காப்பீடு திட்டங்கள் மற்றும்  மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பயிரிழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு  13,692 ரூபாய் வரைநிவாரணம் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எனது தலைமையிலான அரசின் இந்த தொகுப்பு நடவடிக்கைகளுக்கு என  69 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இந்தத் தொகை பயிரிழப்பு நிவாரணத் தொகை நீங்கலானது ஆகும்.  எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களை காப்பாற்றவும், பயிர் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகள் நிவாரணம் பெறவும் வழிவகை ஏற்படும்.  விவசாயிகளின் நலன் காக்கும் எனது அரசின் நடவடிக்கைகளை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு, தன்னம்பிக்கையை இழக்காமல் புதிய  உத்வேகத்துடன் சம்பா பயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை டெல்டா பகுதி விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்
Tags: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்