ஏழு கோடியே எழுபது லட்ச ரூபாயில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடம் திறப்பு

ஞாயி, 12/09/2012 - 17:42 -- Puthiyavan

 

“தன்னை தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல்.  தன்னைத்தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல்.  ஆனால், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல.  சமுதாயத்தில் துன்பப்படுகிறவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய் அவன் கண்ணீரைத் துடைத்து கை கொடுக்கிற எம்.ஜி.ஆர். வள்ளலுக்கெல்லாம் வள்ளல்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்ட  பெருமைக்குரிய தலைவரும், மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய் தமிழக மக்களின் இதயத்தில் என்றென்றும் குடி கொண்டிருப்பவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமாகிய பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புனரமைக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (9.12.2012) திறந்து வைத்தார்கள். 

தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க,  சென்னை காரமராஜர் சாலையில்  8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் நுழைவு வாயிலின் முகப்பினை மாற்றியமைத்தல் மற்றும் முன்பக்கச் சுற்றுச் சுவரினைப் புதுப்பித்தல் பணிகள்  3 கோடியே  40 லட்சம் ரூபாய் செலவிலும்,  எழிலுட்டும் பணிகள்  4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலும் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளின் சிறப்பம்சமாக,  நினைவிடத்தின் முகப்பு வாயில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் திறந்தவெளி முழுவதும் கொரியன் புல் மற்றும் பிரத்யோகமான செடி வகைகளான பல்மெரியா ஆல்பா, டேட் பால்ம், ஸ்பைடர் லில்லி, அடினியம், சைக்கம்பாம்ஸ் ஆகியவற்றைக் கொண்டு புல்வெளி புதுப்பித்து அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் நடுவில் அமைந்துள்ள நடைபாதை புதிய கிரானைட் கற்காளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சமாதியினைச் சுற்றிலும், கிதார் வடிவில் புதிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.  மேலும்  18 மீட்டர் விட்டம் கொண்ட இரண்டு “பர்கோலாஸ்’’ இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக இரண்டு சாய்வு நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுதவிர, நினைவிடத்தின் இரண்டு பக்கங்களின் ஓரங்களிலுள்ள நடைபாதைகள் கான்கீரிட் ஓடுகளாலும், பேவர் பிளாக்குகளாலும் அமைக்கப்பட்டுள்ளன. சமாதியினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மற்றும் சாய்வு நடைபாதைகளின் ஓரங்களில், துருப்பிடிக்காத இரும்பு  (Stainless Steel) கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சமாதியிலும், சமாதியை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வளைந்த இதழ்களிலும், எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெருகேற்றப்பட்டுள்ளது. மத்தியில் அமைந்துள்ள புல்வெளியின் நடுவில் செயற்கை நீரூற்று ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமாதியினை சுற்றி அமைந்துள்ள நீர் அகழியிலும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. நினைவகத்தின் பின்பகுதியில் அழகிய விளக்குகளுடன் கூடிய அரைவட்ட வடிவிலான செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. 
மேலும்,  தேவையான அலங்கார மின் விளக்குகள் போதிய வெளிச்சத்துடன் சமாதி மற்றும் நினைவிடத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.  இது மட்டுமல்லாமல், கூடுதலாக உயர் கோபுர மின்விளக்குகள் நுழைவு வாயிலிலும், சமாதியிலும் பொருத்தப்பட்டுள்ளன.இத்தகைய சிறப்பு அம்சங்களுடன் கூடிய புனரமைக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தை இன்று திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் சமாதிக்கு சென்று  மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தியதோடு, புனரமைக்கப்பட்ட நினைவிடம் முழுவதையும் பார்வையிட்டார்கள்.இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசு தலைமைச்செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர்,  அரசு உயரதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

 

தமிழ்

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்