நெல்லையில் விவசாயி தற்கொலை : வைகோ அறிக்கை

வெள், 01/25/2013 - 15:03 -- Velayutham

 

 
 
நெல்லை மாவட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறப்போரை அறிவித்துள்ளார்.
 
இது குறித்த வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்டம்- சங்கரன்கோவில் வட்டத்தில், வரகனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்ற 48 வயது விவசாயி, தான் மக்காச் சோளம் பயிர் செய்த 20 ஏக்கரும் வறட்சியால் பட்டுப்போய் கடன்வாங்கிப் போட்ட முதலீடு, உழைப்பு அனைத்தும் வீணாகி, கடனையும் கட்ட முடியாத நிலையில், மனம் உடைந்து நேற்று வீட்டுக்குள்ளேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி மனதில் தாங்க முடியாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.
 
தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், பெரும்பாலான பகுதிகளில், வறட்சியின் கோர தாண்டவத்தால், விவசாயிகள் தாங்கமுடியாத நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசு விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன உரங்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, விவசாயிகள் தலையில் கல்லைப் போட்டது.
 
எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், பயிர் செய்து, தக்க விளைச்சல் இல்லாமல், செய்த முதலீட்டையும் இழந்து, கடனில் தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தொடக்கத்திலும் மழையே இல்லாததால், பாசனத்துக்கு வழி இல்லாததால், விவசாயம் செய்ய முடியாத துன்பத்துக்கு ஆளான விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் மாநில அரசு வழங்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள், பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய
 
வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும். தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் அசாதாரணமான இந்த நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். போர்க்கால நடவடிக்கைகளை தமிழகமெங்கும் மாநில அரசு மேற்கொள்ளாவிடில், இன்னும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய துயரங்களுக்கு விவசாயிகள் ஆளாவதும், அதனால் தற்கொலை போன்ற துன்பச் சம்பங்கள் தொடர்வதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
 
விவசாயிகளைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் ஜனவரி 30 ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தலைநகர் சென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணி அளவில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
 
ஜனவரி 30 ஆம் தேதி அன்று திருநெல்வேலியிலும், பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று தலைநகர் சென்னையிலும் நடைபெறும் இந்த அறப்போரில் நான் பங்கேற்கிறேன். கழகக் கண்மணிகளும் விவசாயப் பெருமக்களும் பெருமளவில் இந்த அறப்போரில் கலந்துகொள்ள வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்