பாழடைந்த கட்டிடம், புழுங்கும் இருட்டறை, சிறையில் கொடுமை:பா.ம.க. அறிக்கை

வெள், 05/03/2013 - 10:00 -- Velayutham

 

 
சென்னை
 
 
பா.மா.க தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை
 
மரக்காணம் கலவரத்தில் அப்பாவி வன்னியர்கள் இருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டதற்காகவும், நூற்றுக்கணக்கான வன்னிய இளைஞர்கள் அடித்து காயப்படுத்தப் பட்டதற்காகவும் நீதி கேட்டு கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அறிவித்திருந்தார். அந்தப் போராட்டத்திற்கு எழுத்து மூலம் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. பின்னர் போராட்டம் நடைபெறும் இடத்தை ரயில்நிலையத்திற்கு அருகில் மாற்ற ஆணையிட்டது. ஆனால், போராட்ட தேதிக்கு முந்தைய நாள் நள்ளிரவில் திடீரென போராட்டத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறையினர் திடீரென அறிவித்தனர். எனினும் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக வெறும் 3 ஊர்திகளுடன் போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு மருத்துவர் அய்யா சென்றார். ஆனால் அவரை நகர எல்லைக்கு வெளியிலேயே காவல்துறை வழிமறித்தது. மருத்துவர் அய்யாவின் வலியுறுத்தலால் போராட்டம் நடைபெறும் இடம் வரை செல்ல அனுமதித்த காவல்துறை, போராட்டத்தில் பேசுவதற்கு கூட அனுமதிக்காமல் காரிலிருந்து இறக்கி கைது செய்தது. 
 அதன்பின் காற்றோட்டம் இல்லாத திருமண அரங்கம் ஒன்றிற்கு மருத்துவர் அய்யாவை அழைத்துச் சென்ற காவல்துறையினர் 12 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்து வைத்திருந்தனர். பின்னர் மருத்துவர் அய்யா உட்பட கைதான அனைவரையும் 15 காவலில் வைக்க நீதிபதி ஆணையிட்ட போதும், அதை மதித்து உடனடியாக சிறைக்கு கொண்டு செல்லாமல், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருக்க வைத்தனர். தொடர்ந்து பல்வேறு அலைக்கழிப்புக்குப் பிறகு மே 1-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அய்யாவை திருச்சி மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். மருத்துவர் அய்யா ஏற்கனவே முதுகுத் தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 16 மணி நேரம் அழைக்கழிக்கப்பட்டதால் வலி தாங்க முடியாமல் துடித்து விட்டார்.
பாழடைந்த கட்டிடம்
  தொடர்ந்து சிறை வளாகத்தில் சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டனர். சோதனை முடிந்து சிறைக்குள் சென்ற பின்னர் மருத்துவர் அய்யாவுக்கு இன்னல்கள் அதிகரித்தன. சிறையில் பாழடைந்த, பயன்பாட்டில் இல்லாத , பாலைவனம் போன்று வெப்பம் தகிக்கக்கூடிய ஓர் கட்டிடத்திற்கு  மருத்துவர் அய்யாவை அழைத்துச் சென்ற சிறைத் துறையினர், அங்குள்ள 23 செல்களில் ஒன்றில் அடைத்து சிறை வைத்தனர். அந்தக் கட்டிடம் இலங்கை அகதிகளை அடைத்து வைப்பதற்கான சிறப்பு முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இலங்கை அகதிகள் அடிக்கடி மரத்தில் ஏறி போராட்டம் நடத்துவது வழக்கம் என்பதால், அதைத் தடுப்பதற்காக அங்கிருந்த மரங்கள் அனைத்தையும் சிறைத்துறையினர் வெட்டி வீழ்த்தி விட்டனர். இதனால் அந்தப் பகுதி வெப்பம் நிறைந்து, காற்றோட்டம் இல்லாமல் இருந்தது. 
 தொண்டர்கள் கண்ணீர்
  தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவாக திருச்சியில் தான் 105 டிகிரி வெப்பம் பதிவானது என்பதால், அதிகாலை வேளையிலும் கோடையின் வெப்பம் தகித்தது. தமிழகம் முழுவதையும் வாட்டி வதைக்கும் மின்வெட்டு திருச்சியையும் விட்டு வைக்க வில்லை. ஒரு மணி நேரத்திற்கு மின்சாரம் வந்தால் அடுத்த ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு மின்வெட்டு நடைமுறைப் படுத்தப் படுகிறது. இதனால் மருத்துவர் அய்யா அடைக்கப்பட்டுள்ள அறை இருளில் மூழ்கி விடும். அய்யா அடைக்கப்பட்டிருந்த அறையில் மின் விசிறி இல்லாததால் வியர்வை மழைபோல் கொட்டத் தொடங்கி விடும். இதனால், தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் அய்யா சொல்ல முடியாத அவதிகளுக்கு உள்ளானார். உறக்கமின்றி தவித்தார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தொண்டர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப் பட்டிருந்த போர்வைகளை மடித்து விசிறி  போல விசிறினர். ஆனாலும் வெப்பத்தின் கொடுமையை தாங்க முடியாத மருத்துவர் அய்யா, மேலாடைகளை களைந்து விட்டு  தரையில் படுத்தார்; ஆனாலும் உறக்கம் வராமல் தவித்தார்-துடித்தார்.   அவருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்கள் அனைவரும் இந்தக் காட்சியை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். மருத்துவர் அய்யாவைப் போலவே அவருடன் சிறை சென்றவர்களும் சிறையில் அடைக்கப்பட்ட இரவுப் பொழுதில் உறங்கவில்லை.
46 பேர் இடத்தில் 567 பேர் அடைப்பு
   மருத்துவர் அய்யா அடைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் மொத்தம் 23 செல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இருவர் வீதம் மொத்தம் 46 பேரை மட்டுமே அங்கு அடைக்க முடியும். ஆனாலும், சிறைத்துறையினர் மேலிடத்து உத்தரவின்படி வேண்டுமென்றே ஒரு செல்லுக்கு 20 முதல் 25 பேர் வீதம் மொத்தம் 567 பேரை அடைத்து வைத்தனர். இதனால் மருத்துவர் அய்யா உள்ளிட்ட அனைவரும்  அறைக்குள் உறங்கவோ அமரவோ முடியாமல் தவிக்கின்றனர். சிறையில் குடிக்கவோ, குளிக்கவோ போதிய தண்ணீர் இல்லாததால் அவர்களின் அவதி அளவிட முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. சிறை அறையில் அனைவரும் குளிக்க முடியாது என்பதால் திறந்த வெளியில் தான் குளிக்க வேண்டியிருக்கிறது. மே&1 ஆம் தேதி காலையில் மற்ற சிறைவாசிகள் பயன்படுத்திய கழிப்பிடத்தையும், குளியலறையையுமே மருத்துவர் அய்யாவும் பயன்படுத்தினார்.
    16 மணி நேரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டதாலும், சிறைக்கு வந்த பிறகும் உறங்க முடியாததாலும்  மே&1 ஆம் தேதி காலையில் மருத்துவர் அய்யாவின் முதுகுவலி  உச்சகட்டத்தை அடைந்தது. மருத்துவர் அய்யாவுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தாலும் புதன்கிழமை மதியம் வரை முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. முதுகுவலியால் அவர் துடித்ததை தாங்கிக்கொள்ள முடியாத தொண்டர்கள் சிறை நிர்வாகத்தை வலியுறுத்தியதைத் தொடர்ந்து மே&1 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மருத்துவர் அய்யாவுக்காக ஓர் இரும்பு கட்டில் போடப்பட்டது.
 போதிய உணவு, குடிநீர் இல்லை  
 மருத்துவர் அய்யா நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால், திருச்சி சிறை நிர்வாகமோ மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அதே உணவையே மருத்துவர் அய்யாவுக்கும் வழங்குகிறது. நீரிழிவு நோய் காரணமாக அடிக்கடி பசி எடுக்கும்போதெல்லாம் கையுடன் எடுத்துச் சென்றிருந்த மேரி ரொட்டியை சாப்பிட்டு சமாளித்துக் கொண்டார் மருத்துவர் அய்யா. மதியத்திலும், இரவிலும் மருத்துவர் அய்யாவுக்கும், மற்றவர்களுக்கும் பட்டை சோறு தான் வழங்கப்பட்டது. அதுவும்  போதிய அளவில் வழங்கப்படாததாலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட தரப்படாததாலும் மருத்துவர் அய்யாவும், மற்றவர்களும் இன்னலுக்குள்ளானார்கள். மருத்துவர் அய்யாவுக்கு அதிகாலையிலேயே பசி எடுக்கும் என்பதால் முதல் நாள் இரவு வழங்கப்பட்ட உணவில்  தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் காலையில் கஞ்சியாக கரைத்து குடித்து வருகிறார் மருத்துவர் அய்யா. ஆட்சியாளர்களின் ஆணைக்கிணங்க காவல்துறையினரும், சிறைத்துறையினரும் பலவகையான அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியதாலும், சிறைக்குள்  அனைத்து வகையான நெருக்கடிகளும்  தரப்பட்டதாலும் மருத்துவர் அய்யா உடல் அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும், மனதளவில் தளர்வடையாத மருத்துவர் அய்யா மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராட உறுதி ஏற்றிருக்கிறார்.
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்