இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்

செவ், 01/07/2014 - 09:18 -- Velayutham
 
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு
முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் 
 
சென்னை ஜன 8
 
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிக்கப்பட்டதற்க்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்.
 
தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அடிக்கடி அச்சுறுத்தி சிறைப்பிடித்துச் செல்வது குறித்து எனது ஆழ்ந்த வேதனையையும், விரக்தியையும் வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.இலங்கை கடற்படையினரின் இத்தகைய அடக்குமுறைச் செயல்களால், சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொல்லொணாத் துன்பமும், வாழ்க்கை பிரச்னைகளும் ஏற்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 28 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள், அவர்களது 9 மீன்பிடி படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது குறித்து கடந்த மாதம் 30-ம் தேதி தங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதினேன்.. பாக் வளைகுடாவில் பாரம்பரியமுள்ள தங்களின் கடற்பகுதியில் வாழ்வாதாரத்திற்காக "வல்லம்" என்ற பாரம்பரிய மீன்பிடி படகுகள் மூலம் மீன்பிடிக்கும் ஏழை மீனவர்களையும் அண்மைக்காலமாக அராஜக இலங்கை கடற்படையினர் விட்டுவைக்கவில்லை. 
சமீபத்தில், கடந்த 2-ம் தேதி IND-TN-09-MM-178, IND-TN-11-MM-195, IND-TN-11-MM-199, IND-TN-11-MM-257 மற்றும் IND-TN-09-MM-127 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட 5 இயந்திர மீன்பிடி படகுகளில் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள், மண்டபம் தெற்கு மீன்பிடி தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்று மன்னார்வளைகுடாவில் தங்களுக்கு பாரம்பரியமுள்ள கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து கொண்டு சென்றது. 
 
ஏற்கெனவே, இலங்கை சிறைகளில் பல மாதங்களாக நமது மீனவர்கள் 250 பேர், அந்நாட்டு அரசால் விடுவிக்கப்படாமல் வாடி வருவதையும், அவர்களுக்கு சொந்தமான 79 மீன்பிடி படகுகள், இலங்கையின் வசம் தொடர்ந்து வைக்கப்பட்டு சேதமடைவதோடு, அவை வருங்காலத்தில் முற்றிலும் மீன்பிடிக்க பயன்படாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும், தங்களுக்கு  நினைவூட்டவிரும்புகிறேன்.
பாக் வளைகுடாவில் அமைதியாக மீன்பிடிக்கும் நமது நிராயுதபாணியான அப்பாவி மீனவர்களை விரட்டியடிப்பது மற்றும் கைது செய்வதன் மூலம், இந்த வளைகுடா பகுதியில் தங்களுக்குள்ள ஆதிக்க போக்கை இலங்கை கடற்படையினர் நிலைநாட்டுகின்றனர் - இதுதொடர்பாக, இந்திய அரசு மிகவும் பலவீனமான முறையில் பதில் நடவடிக்கை மேற்கொள்வதால் நமது அப்பாவி மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல்களை நடத்த இலங்கை கடற்படையினருக்கு துணிச்சல் ஏற்பட்டுள்ளது - இதனால், இந்திய அரசு மீது மீனவ சமுதாயத்தினர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு கோபமும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னையில்,தாங்கள் நேரடியாக தலையிட்டு, இந்திய அரசின் தூதரக வழிமுறைகள் மூலம் திட்டவட்டமாக - உறுதியான வகையில் செயல்பட்டு, ஏற்கெனவே இலங்கை சிறையில் உள்ள 250 மீனவர்களையும், கடந்த 2-ம் தேதி கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும், அவர்களுடைய 84 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தாங்களை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்