பொதுத்துறை வாரிய அலுவலக பணியாளர்களுக்கு சிறப்பு பொங்கல் போனஸ்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள், 01/10/2014 - 10:11 -- Velayutham
 
பொதுத்துறை வாரிய அலுவலக பணியாளர்களுக்கு சிறப்பு பொங்கல் போனஸ்: 
முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
 
சென்னை, ஜன. 11
 
பொதுத்துறை வாரிய அலுவலக பணியாளர்களுக்கு சிறப்பு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிடுள்ள அறிக்கை.
 
நாட்டின் இன்றியமையாத் தேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், குறைந்த விலையில் நிறைவான சேவையை அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், நாட்டின் பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டவை பொதுத் துறை நிறுவனங்கள்.
 
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் நன்கு செயல்பட வேண்டுமானால், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்குரிய பயன்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும்.
 
எனவே தான், எனது தலைமையிலான அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 1965 ஆம் ஆண்டு போனஸ் வழங்குதல் சட்டத்தின்படி போனஸ் வழங்கி வருகிறது. போனஸ் வழங்கும் சட்டத்தின் கீழ் வராத பணியாளர்களுக்கு பொங்கல் தினத்தை ஒட்டி, சிறப்பு போனஸ் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
 
அந்த வகையில், தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2012–2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,
 
தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்களில், 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத கண்காணிப்பு நிலையில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2014–ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.
 
1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத ‘சி’ மற்றும் ‘டி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2012– 2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் தொகையாக 31.3.2013 அன்று உள்ள ஊதியத்தின் அடிப்படையில், 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்.
 
சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்கள் மற்றும் அரசுப் போக்கு வரத்துக் கழகங்களின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டது போல் 500 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.
 
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை மூலம், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையினை மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாட வழிவகை ஏற்படும்.
 
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்