இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்
இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில்
தமிழகம் தொடர்ந்து முதலிடம்
ஆளுநர் வித்யாசாகர்ராவ் பாராட்டு
சென்னை, ஆக.14
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருவதற்கு ஆளுநர் வித்யாசாகர்ராவ் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பரிசுகளையும், உடல் உறுப்பு தானம் செய்த குடும்ப உறுப்பினர்களை கவுரவித்து பரிசுகளையும் தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் வழங்கினார். அதனைத் தொடர்ந்து உடலுறுப்பு குறித்து ஆண்டறிக்கையை தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் வெளியிட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து விழா பேருரை ஆற்றிய ஆளுநர் வித்யாசாகர்ராவ், உடல் உறுப்பு தானம் செய்யும் பணியானது பாராட்டுக்குரியது. தமிழகம் உடல்உறுப்புகளை பெற்று மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக உடல் உறுப்புன அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருதினை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதற்காக தமிழகத்தை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன்.
உடல் உறுப்பு தானத்தை அனைவரும் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிகளவில் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஆண்டிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மட்டும் சுமார் 2 லட்சம் பேருக்கு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் 6 ஆயிரம் சிறுநீரகம் மட்டுமே கிடைக்கிறது. அதேபோல் இருதயம், கல்லீரல் போன்றவையும் தேவையாக உள்ளன. இந்தியாவில் உள்ள சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் 2014 &15 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி சாலை விபத்துகள் 4 லடசத்து 89 ஆயிரத்தில் இருந்து 5 லடசத்து 1 ஆயிரமாக உள்ளது. அவற்றில் சுமார் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் இறக்கின்றனர். எனவே இவர்களின் உடல் உறுப்புகளை வீணாக்காமல் இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நூரையீரல் உள்ளிட்டவற்றை தேவை உள்ளவர்களுக்கு அளிக்க வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தான் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணைய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே தலைவராக இருந்து வழிநடத்தினார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மூலம் இலவசமாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இச்சிகிச்சைக்காக ரூ.35 லட்சம் வரை உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தமிழக அரசு பயனாளிகளுக்கு வழங்கிறது. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகமான தொகையாகும். இது வரை இரண்டு முறை தேசிய அளவிலான உடல் உறுப்பு தானத்திற்கான சிறப்பு விருதை மத்திய அரசிடமிருந்து தமிழகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி மனதின் குரல் பதிப்பில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருப்பதால் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாக, சிறந்து விளங்குவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் செயற்கை சுவாசக் கருவி மூலமாக இயங்குவதால், இதயத்தின் செயல்பாடு திடீரென நின்று விட்டால் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் தானாகவே நின்றுவிடும். எனவே மூளைச்சாவு அடைந்தவரின் உறவினர்கள் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் தானம் செய்ய வேண்டும்.
இதன்படி மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், இதயவால்வு, இரத்த குழாய், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் 7 பேருக்கு வாழ்வளிக்க முடியும்.
ஆகஸ்ட் மாதம் 13- ந் தேதி முதல் நவம்பர் மாதம் 27- ந் தேதி வரை உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திட தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையான தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாக தொடர்ந்து விளங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் மருத்துவச் சேவை இயக்குனர் ஜெகதீஸ் பிரசாத், தேசிய உடல்உறுப்பு தான அமைப்பின் இயக்கனர் விமல் பாந்தாரி, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.