ஓ.பன்னீர்செல்வம் டெல்லி விரைவு
ஓ.பன்னீர்செல்வம் டெல்லி விரைவு
சென்னை, ஆக.13:மகாராஷ்டிரா மாநிலம் ஷிங்னாபூர் சனீஸ்வரர் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு செய்த ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து உடனடியாக புனே சென்றார் இந்று பிற்பகல் 3 மணிக்கு விமானத்தில் டெல்லி விரைகிறார்.
நாளை காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுக இணைப்பில் ஏற்பட்டுள்ள
சிக்கல் இந்த சந்திப்புக்கு பிறகு தீரும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.
டெல்லியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து மகாராஷ்டிர மாநிலம் சென்றார். நேற்று ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இன்று காலை ஷிங்னாபூர் என்ற இடத்திலுள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். ஓ.பன்னீர்செல் வம் நடத்திய வழிபாட்டில் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே மோடியை நேற்று முன்தினம் பன்னீர் செல்வம் சந்திக்காதது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை முதலமைச்சர் பதவி மற்றும் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவி ஆகியவற்றை பன்னீர்செல்வத்துக்கு வழங்க இபிஎஸ் அணியினர் முன்வந்தனர். ஆனால் ஓபிஎஸ் அணியினர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்குவது ஆகிய இரு கோரிக்கையில் உறுதியாக இருந்தனர்.
தினகரனின் துணை பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் அவர்கள் பாதி தான் வந்து இருக்கிறார்கள். இன்னும் பாதி வரவேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை , இபிஎஸ் அணியினர் பாதி வந்த பிறகு இன்னொரு பாதியை ஓபிஎஸ் அணியினர் செய்ய வேண்டும் அப்போது தான் இணைப்பு விரைவில் நடைபெறும் என்றார்.
டெல்லியில் பிரதமரை சந்திக்காதது ஏன் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமியிடம் கேட்டதற்கு அதற்கு அவசியம் இல்லை என்றார்.
இதனிடையே தினகரனின் நியமனம் செல்லாது என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஒபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு தாக்கல் செய்து இருப்பது எடப்பாடி அணியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மும்பையில் தங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை இன்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அதிமுக இணைப்பு குறித்து முக்கிய திட்டம் இறுதிப்படுத் தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்த உடனடியாக டெல்லி செல்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.சுதந்திர தினத்திற்குள் இணைந்து விட வேண்டும் என்று பிஜேபி மேலிடம் கெடு விதித்து இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்த கெடு முடிவடைவதற்கு இன்னும் ஒரே நாளே இருப்பதால் அதற்குள் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நாளை மறுதினம் சுதந்திர தினம் என்பதால் பிரதமர் சுறுசுறுப்பாக இருப்பார். எனவே நாளை காலை 11 மணிக்கு மோடி – ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.