மினசோட்டா: அமெரிக்காவில் உள்ள மினசோட்டா தமிழ்ச் சங்கம், பிப்ரவரி 1ம் தேதி சங்கமம் பொங்கல் விழா கொண்டாடிய நிலையில், “மாவீரன் இராசேந்திரச் சோழன்” என்ற வரலாற்று நாடகத்தை சிறப்பு நிகழ்ச்சியாக அரங்கேற்றியது. தமிழ் வரலாற்றின் முக்கியமான பகுதியை மேடையேற்றி, பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இந்த நாடகம் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழர்களின் பண்பாட்டு விழாவாக மினசோட்டா சங்கமம்.
அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள், தங்கள் பண்பாடு மற்றும் மொழியை பேணிப் பாதுகாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் மினசோட்டா தமிழ்ச் சங்கம் நடத்தும் “சங்கமம்” பொங்கல் விழா, தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளின் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.
நாடகத்தின் சிறப்புகள்:
எழுத்தாளர் அ. வெண்ணிலாவின் “கங்காபுரம்” நாவலை அடிப்படையாக கொண்டு, முனைவர் ராஜு நாடகத்திற்காக திரைக்கதை உருவாக்கி இயக்கம் மேற்கொண்டார்.ராசேந்திர சோழன் இளவரசனாக முடிசூட்டப்பட்ட பின்னர், தந்தையின் பெருமையின் நிழலில் இருந்து தனித்துவமாக உருபெற, தலைநகரை தஞ்சாவிலிருந்து “கங்கைகொண்ட சோழபுரம்” மாற்றிய பின்னர் சந்தித்த மனப் போராட்டங்களை மையப்படுத்தியிருந்தது.
நாடகத்திற்கு நவீன தயாரிப்பு முறைகள்.
நாடக தயாரிப்பு:
4 மாதங்களாக இணைய வழியில், வசன உச்சரிப்பு, காட்சிகள் ஆகியவற்றிற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
உடல் மொழி மற்றும் உணர்வுகளுக்காக 1 மாத நேரடி பயிற்சியும் நடத்தப்பட்டது.
நாடகத்திற்கான உடை, அலங்காரப் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டன.
மேடைக்காக 8 அடி உயர 6 தூண்கள், ஒளி, ஒலி அமைப்புகள் மிக நுட்பமாக தயாரிக்கப்பட்டன.
நாடகம் 18 காட்சிகளுடன், பரதம், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட 5 பாடல்களுடன் 1 மணி 30 நிமிடங்கள் மிக பிரமாண்டமாக நிகழ்த்தப்பட்டது.
மினசோட்டா தமிழ்ச் சங்கம் – பெருமையான சாதனை.
மினசோட்டா தமிழ்ச் சங்க உறுப்பினர்களே இந்த நாடகத்தில் நடித்தனர்.
நாடக ஒருங்கிணைப்பாளர்களாக சிவானந்தம், சுந்தரமூர்த்தி, செந்தில்குமார், ப்ரியா, சச்சிதானந்தன், வேல்முருகன் ஆகியோர் பணியாற்றினர்.
தமிழரின் பெருமை, இராசேந்திர சோழனின் வரலாற்று முக்கியத்துவம் உலகறிய, இது முதல் முறையாக நவீன நாடக வடிவில் அமெரிக்காவில் அரங்கேற்றப்பட்டது என்று சங்கத்தின் தலைவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
பெரும் வரவேற்பு பெற்ற வரலாற்று நாடகம்.
அமெரிக்காவில் தமிழர் கலாச்சாரத்தை பேணும் முயற்சியில் மிக முக்கியமான நிகழ்வாக இந்த நாடகம் அமைந்துள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த பிரமாண்ட நிகழ்ச்சி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழர் பெருமையை உலகறியச் செய்த மினசோட்டா தமிழ்ச் சங்கத்திற்கும், நாடக குழுவிற்கும் பாராட்டுகள் குவிகின்றன.