கேரள மாநிலம் திரிச்சூரில், கடன் பிரச்சனை காரணமாக பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சாலக்குடியைச் சேர்ந்த ரிஜோ ஆண்டனி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வங்கிக்குள் நுழைந்து கத்தியால் மிரட்டல் – சிசிடிவியில் சிக்கிய குற்றவாளி
திரிச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஹெல்மெட், கிளவுஸ் மற்றும் பேக் அணிந்திருந்த அந்த நபர், வங்கிக்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி பணியாளர்களை மிரட்டி, லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றார்.அச்சத்திற்குள்ளான வங்கி நிர்வாகத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையடித்த நபரை அடையாளம் கண்டனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மூன்று நாட்களுக்குள் ரிஜோ ஆண்டனியை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மீட்டுள்ளனர்.
கடன் சுமை தாங்க முடியாமல் வங்கி கொள்ளை – போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை
கைது செய்யப்பட்ட ரிஜோ ஆண்டனி, வெளிநாட்டில் செவிலியராக பணிபுரியும் தனது மனைவியால் அனுப்பிய பணத்தை ஆடம்பரமாக செலவழித்து, கடன் சுமையில் சிக்கியிருந்தார். மனைவி திரும்பி வருவதற்குள் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.தயாராக வங்கி கொள்ளை செய்ய முனைந்த ரிஜோ, மூன்று நாட்களுக்கு முன்பே அந்த வங்கிக்கு சென்று அதிகாரிகள் எப்போது இல்லாமல் இருப்பார்கள் என்பதைக் கவனித்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகழ் திட்டமிட்ட கொள்ளை என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
கொள்ளையடித்த பணத்தில் எவ்வளவு மீட்கப்பட்டது?
போலீஸார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், 10 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள தொகையை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போலீசார் எச்சரிக்கை – கடன் சுமை காரணமாக தவறான முடிவெடுக்க வேண்டாம்.
இச்சம்பவம், பெரும் கடன் சுமை, அதனால் ஏற்படும் மன அழுத்தம், தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை காட்டுகிறது. காவல்துறையினர், கடன் சுமை காரணமாக இந்த மாதிரியான குற்றங்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த சம்பவம், வங்கிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் உறுதி செய்ய வேண்டிய அவசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.