இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் கப்பல்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடரும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகளை எழுப்பியுள்ள நிலையில், அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
ஜனவரி 28ஆம் தேதி அதிகாலை, நெடுந்தீவு அருகே 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது, இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
இலங்கை அதிகாரிகளின் நிலைப்பாடு
இந்நிலையில், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர், “கடல் எல்லையில் சட்டவிரோதமாக நடக்கும் கடத்தல், மனிதக்கடத்தல், சட்டவிரோத மீன்பிடி, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை 24 மணிநேரமும் செயல்படும்” என்று கூறினார்.
மேலும், இவை அனைத்தும் சட்டப்பூர்வமான முறையில் மேற்கொள்ளப்படும் என்பதையும், இலங்கை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படும் போது எந்த மோதலும் ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.