ஒருவர் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம். பெண்களும், ஆண்களைப் போலவே உடல்நலத்திற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, கர்ப்ப காலத்திலும் மிதமான உடற்பயிற்சிகள் செய்வது மகப்பேறு ஆரோக்கியத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் மேம்படுத்தும். கர்ப்ப காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும், ஆனால் முழுவதுமாக நிறுத்த கூடாது. மகப்பேறு மருத்துவர் நந்தினி, கர்ப்ப கால உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.
கர்ப்ப கால உடற்பயிற்சியின் முக்கிய நன்மைகள்
எடையை பராமரிக்க உதவும்
கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், உடற்பயிற்சி செய்யும் பெண்கள், உடற்பயிற்சி செய்யாதவர்களை விட குறைவாக எடை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், பிரசவத்திற்குப் பிறகு எடை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது.
பிரசவத்திற்கான ஆயத்தத்தை மேம்படுத்தும்
மிதமான உடற்பயிற்சிகள் கர்ப்பிணிப் பெண்களின் சகிப்புத்தன்மை மற்றும் உடல் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது பிரசவத்தை எளிதாக்கி, வலியைக் குறைக்கும்.
மன அழுத்தத்தைக் குறைத்து, உடலை இலகுவாக உணர செய்யும்
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் மாற்றத்தால் சில பெண்கள் சோர்வாக உணரக்கூடும். உடற்பயிற்சி செய்வது இந்த மன அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான உணர்வை ஏற்படுத்தும்.
வலியை குறைக்கும்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் வலி, எலும்பு மற்றும் தசை பிடிப்புகளை உடற்பயிற்சி குறைக்க உதவும். தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் கால்களை அசைப்பது வீக்கம் மற்றும் உடல் அசௌகரியத்தைத் தடுக்க உதவும்.
கவனச்சிதறலை தடுக்கும்
கர்ப்பிணிப் பெண்களுக்கு புகைபிடிப்பு அல்லது பிற கேடுயளிக்கும் பழக்கவழக்கங்களிலிருந்து விலக, உடற்பயிற்சி ஒரு நல்ல மாற்றாக செயல்படும்.
மலச்சிக்கலை குணப்படுத்தும்
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சினையாகும். உடற்பயிற்சி செய்வது குடல் இயக்கத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை குறைக்க உதவும்.
நீச்சல் – பாதுகாப்பான உடற்பயிற்சி
கர்ப்பிணிப் பெண்களுக்கு நீச்சல் ஒரு பாதுகாப்பான மற்றும் எளிதான உடற்பயிற்சி ஆகும். இது உடல் அழுத்தத்தை குறைத்து, வலியை சமாளிக்கவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான ஒரு தேர்வாக இருக்கும். ஆனால், எந்த பயிற்சிகள் பாதுகாப்பானது, எந்தளவிற்கு செய்யலாம் என்பதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ள வேண்டும்.