கள்ளச்சாராயக் கும்பலுடன் தொடர்பில் இருந்த ஆறு காவல்துறையினருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது

Police Retirement

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில், 2023 மே 13 அன்று, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள், புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல, மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராயக் கும்பலைச் சேர்ந்த 15 பேரைக் கைது செய்தனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆறு காவல்துறையினர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். அதன் பின், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு, தொடர் விசாரணை நடந்து வந்தது. தற்போது, ஆறு காவல்துறையினரும் கள்ளச்சாராயக் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ரோசனை, அரகண்டநல்லூர் காவல் நிலைய ஏட்டுகள் வேலு, செந்தில்குமார்; காவலர்களாகப் பணியாற்றும் காஞ்சனூர் முத்துகுமார், விக்கிரவாண்டி குணசேகரன், சத்தியமங்கலம் பிரபு, கோட்டாக்குப்பம் மதுவிலக்கு காவலர் அருணன் ஆகியோருக்கு, விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷா மிட்டல் கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

கட்டாய ஓய்வு குறித்து, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:

கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட காவல்துறையினருக்கு, தற்போது வாங்கும் சம்பளத்தைக் கணக்கிட்டு, ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்களால், ஓய்வு பெறும் வயது வரை பணியாற்ற முடியாது.

‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் எதுவும் கிடைக்காது. குற்றத்தின் தன்மை மற்றும் வயதைப் பொறுத்து, இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *