உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலர் பல்வேறு வழிகளை கடைப்பிடிக்கின்றனர். நம் சமையலறையில் இருக்கும் சில இயற்கை பொருட்களே இதற்கான சிறந்த தீர்வாக அமைகின்றன. இவற்றில் முக்கியமானது பூண்டு. பூண்டு அன்றாட சமையலில் சுவையையும் மணத்தையும் கூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறதாலும், அதன் மருத்துவ நன்மைகள் பலருக்கு மறைந்துள்ளன. குறிப்பாக, வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
பூண்டில் உள்ள சத்துக்கள்:
பூண்டில் அல்லிசின், சல்பர், செலினியம், வைட்டமின் பி6 மற்றும் சி போன்ற பல சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் இருந்து இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதுவரை பல நன்மைகளை வழங்குகின்றன.
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் உடல் நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகரிக்கிறது. அல்லிசின் பொருள் கிருமிகளை எதிர்த்து உடலின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும்வர்களுக்கு இது ஒரு எளிய தீர்வாக இருக்கும்.
இரத்த அழுத்தம் சீராகும்
உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு ஒரு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. அல்லிசின் இரத்த நாளங்களை தளர்வடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக மாற்றுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் இதை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்
பூண்டு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்த நாளங்களில் ப்ளேக்குகள் படிவதைத் தடுக்க உதவுகின்றன.
செரிமானம் மேம்படும்
பூண்டு செரிமான செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது. வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது, இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது.
அழற்சிகளை குறைக்கும்
நாள்பட்ட அழற்சிகளால் ஏற்படும் ஆர்த்ரிடிஸ், இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தீர்வாக இருக்கும். வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இதை மேலும் பராமரிக்கலாம்.
பூண்டு சாப்பிடுவதற்கான சரியான முறைகள்:
காலையில் ஒரு பூண்டு பல்லை நன்கு மென்று சாப்பிட்டு பின்பு ஒரு டம்ளர் சுடுநீரை குடிக்கவும். இதனால் பூண்டில் உள்ள அல்லிசின் முழுமையாக செயல்பட்டு உடலுக்கு பல நன்மைகளை வழங்கும்.
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆராய்ச்சி மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு உணவுப் பழக்கத்தையும் பின்பற்றும் முன் மருத்துவரை அணுகவும்.