சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தமிழகத்தில் 53 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தன்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தவே இவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பெரியார் தொடர்பாக அவதூறாக பேசியதில்லை; அவர் எழுதியவற்றையும் பேசியவற்றையும் மட்டுமே பொதுவெளியில் குறிப்பிட்டேன் என்று தனது மனுவில் சீமான் விளக்கமளித்துள்ளார்.
பெரியார் குறித்து அவதூறாக பேசினார் என்பதற்காக சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் அவரின் உருவப்படம் எரிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டம் செயல்படுத்த வேண்டும் என பெரியார் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புகார்களின் அடிப்படையில், சீமான் விசாரணைக்கு ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீடு மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமையகம் ஆகிய இடங்களில் நேரில் சென்று போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், 53 வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதுடன், காவல்துறையினரின் தொடர்ச்சியான அழுத்தங்களை தவிர்க்க தன்னை விசாரணைக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் சீமான் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்த உள்ளது.