சென்னை: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு எந்த நோக்கத்திற்காக நடந்தது? அதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றி எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
செங்கோட்டையன் – ஸ்டாலின் சந்திப்பு: அரசியல் மாற்றத்திற்கான நீக்கமா?
கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த செங்கோட்டையன், இருவரும் சில முக்கியமான விவகாரங்களை பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. திமுகவுக்கு செங்கோட்டையன் செல்லப் போகிறாரா? அல்லது எந்த புதிய முடிவும் இல்லாமல் காலத்தை பொறுத்து பார்த்து இருக்கிறாரா? என்பது குறித்து அவரது ஆதரவாளர்களிடமிருந்தே மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
திமுகவின் அழைப்பு – செங்கோட்டையன் பதில்?
செங்கோட்டையன் தனது நெருங்கிய வட்டாரத்தில், “திமுகவுக்கு வந்தால், உனக்கு அங்கீகாரம் கிடைக்கும், முக்கிய பொறுப்புகளும் கிடைக்கும்” என்று முதல்வர் கூறினார் என தெரிவித்ததாக தகவல். ஆனால், “இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சூழலை கவனித்து பிறகு பார்க்கலாம்” என அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது.இதே வேளையில், சசிகலா மற்றும் தினகரன் அணியினர், “அதிமுக விரைவில் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடும். நீங்களே கட்சியின் முக்கிய பதவிகளை பிடிக்க முடியும், எனவே எந்த முடிவும் எடுக்க வேண்டாம்” என்று அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்.
எடப்பாடி பழனிசாமியின் எதிர்வினை – உளவுத்துறை உதவி?
செங்கோட்டையன்-ஸ்டாலின் சந்திப்பை அறிந்த எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரியின் உதவியையும் கேட்டுள்ளதாகவும், இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பதை ஆராய உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், செங்கோட்டையன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவிலேயே செங்கோட்டையன் தலைமைக்கு வந்தால்?
அதிமுகவில் உள்ள குழப்பமான சூழ்நிலை காரணமாக, செங்கோட்டையன் கட்சித் தலைமையின்பால் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதாகவும், அதிமுக தலைமைக்கு எதிராக தொடரப்பட்ட சிவில் வழக்கின் போக்கை கவனித்து, எதிர்காலம் குறித்து முடிவெடுக்கலாம் என அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறியதாக தகவல்.அதிமுகவிலிருந்து விலகி ராஜினாமா செய்யும் எண்ணம் செங்கோட்டையனுக்கு இருந்ததாகவும், ஆனால் அதனை நிறைவேற்றாமல் வைத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணித்தது – காரணம் என்ன?
முதல்வராக இருந்த போது எடப்பாடி பழனிசாமி செயல்படுத்திய அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்திய போது, செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதற்காக அவர் எடப்பாடியுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுந்தன. செங்கோட்டையன் “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லாததால் விழாவிற்கு செல்லவில்லை” என்று கூறியிருந்தாலும், நிஜமான காரணம் அது அல்ல என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செங்கோட்டையன்-சசிகலா நெருக்கம்?
முந்தைய ஆண்டு முதல் செங்கோட்டையன் சசிகலாவுடன் நெருங்கி இருந்து வருவதாகவும், அதிமுகவில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2026 தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் மாற்றங்கள் நிகழுமா? என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.இந்த சூழ்நிலையில், செங்கோட்டையன் அதிமுகவிலேயே நீடிக்கப் போகிறாரா? அல்லது புதிய அரசியல் பயணத்தை தொடங்குவாரா? என்பதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.