டெல்லியை தொடர்ந்து பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!

0448.jpg

நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு, பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ஒடிஷாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் நிலநடுக்கம் – மக்கள் வீதிக்கு வெளியேறினர்

இன்று அதிகாலை 5.35 மணியளவில் டெல்லியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்வுகளால் கட்டிடங்கள் குலுங்க, உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கத்துடன் தொடர்புடைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில், “அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்” என பதிவு செய்துள்ளார். மேலும், டெல்லி போலீசார் அவசர உதவிக்காக 112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம் – பதற்றத்தில் பொதுமக்கள்!

டெல்லி நிலநடுக்கத்தை தொடர்ந்து, பீகாரின் சிவான் மாவட்டத்தில் இன்று காலை 8.02 மணிக்கு 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிமீ ஆழத்தில் உருவாகியுள்ளது.

அதேபோல், ஒடிஷாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் பயப்பில் உறைந்துள்ளனர்.

பிரதமர் மோடி – மக்களுக்கு வேண்டுகோள்

நிலநடுக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி மற்றும் புறநகர பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்து அமைதியாக இருக்க வேண்டும். அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

தற்போது வரை உயிரிழப்பு, சேதங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால், மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top