சென்னை: தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்களை கன்னட மக்களும் ஆதரித்து வருகின்றனர். கர்நாடகாவில் இந்தக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் தங்களது நிலையை வெளிப்படுத்தி, சமூக வலைதளங்களில் அதைப் பற்றி விவாதித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில், தேசிய கல்விக் கொள்கை கடுமையான எதிர்ப்பை சந்திக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டங்களில் தமிழக அரசு கையெழுத்து போடாததால் ரூ. 5,000 கோடி நிதி இழக்க நேரிடும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். ஆனால், தமிழக அரசு இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று மீண்டும் உறுதி செய்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக தனது கண்டன உரையில்,
“எங்கள் மொழி உலகின் சிறந்த செம்மொழிகளில் ஒன்று! அதை அழிக்க நினைக்கும் எந்த முயற்சியும் தமிழர்களால் ஏற்கப்படாது. எந்த அளவிற்கும் நிதி கொடுத்தாலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தயாராக இல்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதி வழங்கப்படும் என்பது எவ்வாறு நியாயமாகும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்நாட்டுக்குரிய ரூ. 2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.
கன்னட மக்களின் கோரிக்கை
தமிழ்நாட்டின் இந்த நிலைப்பாட்டை கன்னட மக்களும் வரவேற்கின்றனர். சமூக வலைதளங்களில்,
“தமிழர்களின் கல்வி உரிமைக்காக எடுத்துக்கொள்ளும் போராட்டம் எங்கள் மாநிலத்திலும் இருக்க வேண்டும். ஸ்டாலின் மாதிரி நம்மளுக்குப் பேச யாரும் இல்லை!” என கருத்துகள் பரவுகின்றன.
ஒருவர்,
“தமிழர்களைப் போல நாம் 10% ஆனாலும் கல்விக்கான உரிமையைப் பற்றி சிந்திக்க வேண்டும். இங்கே யாரும் ஸ்டாலினைப் போல் பேசுவதில்லை,” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர்,
“தமிழர்கள் அல்லது கன்னடர்களை மூன்றாவது மொழியாகக் கற்பிக்கும் வட இந்திய அரசுப் பள்ளிகள் எங்கே? எதுவுமே இல்லை. தமிழ்நாடு முதல்வரின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது!” என்று தெரிவித்திருக்கிறார்.
“இந்தியாவின் ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் கூட்டாட்சிக் கொள்கைக்காக போராட வேண்டும். டெல்லியில் உள்ள சில அதிகாரிகள் நமக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது,” என்று நெட்டிசன்கள் வாதிடுகின்றனர்.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு காட்டும் உறுதியான நிலைப்பாடு, மற்ற மொழி பேசும் மக்களிடையே ஆதரவைப் பெறத் தொடங்கியுள்ளது.