உலகம் முழுவதும், தண்ணீருக்கு அடுத்ததாக மக்கள் அதிகம் விரும்பி குடிக்கும் பானம் தேநீர்தான். உணவை தவிர்த்தாலும், ஒரு கப் சூடான தேநீரை மறுக்க முடியாது. பல்வேறு வகையான தேநீர்களில், சமீபத்தில் மிகவும் பிரபலமானதாக மாறியுள்ளதே ஈரானி டீ.
நம் ஊர்களில் இடம் பெற்றுள்ள இந்த ஈரானி டீ கடைகள், அதன் தனித்துவமான சுவையால் அனைவரின் விருப்பமான இடமாகி வருகின்றன. வழக்கமான தேநீரில் தண்ணீர் மற்றும் பாலின் விகிதம் சமமாக இருக்கும். ஆனால், ஈரானி டீயில் அதிகமான பால் சேர்க்கப்படுகிறது. பாலின் அடர்த்தியை அதிகரிக்க, அதை நீண்ட நேரம் கொதிக்க விடுவது இதன் முக்கியமான தன்மை. மேலும், சுவையான ஈரானி டீ தயாரிக்க, ஸ்ட்ராங்கான பிளாக் டீ தேவைப்படுகிறது.
இந்த ஈரானி டீயை இனி வீட்டிலேயே எளிதாக செய்து பரிமாறலாம். எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1.5 கப் தண்ணீர்
2 ஸ்பூன் தேநீர் தூள்
6 பச்சை ஏலக்காய்
1.5 – 2 ஸ்பூன் சர்க்கரை (சுவைக்கு ஏற்ப)
1.5 கப் முழு கொழுப்புள்ள பால்
செய்முறை:
பாலை தயாரித்தல்:
ஒரு ஆழமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.தீயை குறைத்து, பால் பாதியாக ஆவியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
கடைகளில் விற்கும் ஈரானி டீயில் ப்ரெஷ் க்ரீம் சேர்க்கப்படும். ஆனால், இது விருப்பத்திற்கேற்ப சேர்க்கலாம்.
பிளாக் டீ தயார் செய்தல்:
மற்றொரு பாத்திரத்தில் 1.5 கப் தண்ணீர் ஊற்றி, 2 ஸ்பூன் தேநீர் தூள் சேர்க்கவும்.
6 ஏலக்காயை நசுக்கி அதில் சேர்த்து கொதிக்க விடவும்.
இதை மூடி வைத்து, மிதமான தீயில் 7-8 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும்.
ஈரானி டீ சேர்த்தல்:
கொதித்த பாலை வடிகட்டி, ஒரு தனிப்பட்ட டம்ளரில் மாற்றி கொள்ளவும்.
தயாராக உள்ள பிளாக் டீயை கோப்பைகளில் ஊற்றி, மேலே கெட்டியான பாலை சேர்க்கவும்.
நீங்கள் விரும்பினால், பாலை முதலில் ஊற்றி, பின்னர் பிளாக் டீ சேர்த்தும் பரிமாறலாம்.
குறிப்பு:
மேலும் கிராம்பு, இலவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்களை சேர்த்தால், அதிக நறுமணம் மற்றும் சுவையை பெறலாம்.
சிறிதளவு ப்ரெஷ் க்ரீம் சேர்த்தால் கடை தரமான ஈரானி டீயின் சுவை கிடைக்கும்.
சரியான விகிதத்தில் பால் மற்றும் பிளாக் டீ சேர்ப்பதே முக்கியம்.
இனி கடைகளுக்கு செல்ல தேவையில்லை! வீட்டிலேயே சுவையான ஈரானி டீ தயார் செய்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிமாறுங்கள்.