டாக்கா: இந்தியாவுடன் உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள வங்கதேச இடைக்கால அரசு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது. யூனுஸ், இந்தியாவுடன் அதிக நெருக்கத்தை காட்டாமல், பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்த முயல்கிறார்.
இந்த மாற்றத்தால், இந்தியா-வங்கதேச உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஆதாரமாக கொண்டு, அவரை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேச அரசு தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறது.இதுகுறித்து, வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது தவ்ஹித் உசேன் சமீபத்தில் கூறியதாவது:
“இந்தியா, ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும். அது சாத்தியமில்லையெனில், அவருக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இந்தியாவில் இருந்தபடியே அவர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் ஏற்பட்ட பிரச்னைகளால் மக்கள் அவரை எதிர்க்கின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து வெளியிடும் வீடியோக்கள், வங்கதேச அரசை சிக்கலுக்குள்ளாக்குகின்றன.”
ஷேக் ஹசீனா தனது இணையவழி வீடியோக்களில், முகமது யூனுஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர் கூறியது:
“முகமது யூனுஸ் என்னை கொலை செய்ய முயன்றார். அவரது ஆட்சியால் வங்கதேச பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நான் விரைவில் வங்கதேசம் திரும்புவேன்.”இந்தக் குற்றச்சாட்டுகள், முகமது யூனுஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எனவே, ஷேக் ஹசீனாவை நாடு கடத்த முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அவர் கருத்துக்களை கட்டுப்படுத்த வேண்டும் என வங்கதேச அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருகிறது.