அன்றாடம் இட்லி, தோசையால் சலித்துவிட்டீர்களா? அப்படியானால், இன்று வித்தியாசமாக, வரகரிசி கொண்டு ஒரு ஆரோக்கியமான பொங்கல் செய்து பாருங்கள். பொங்கல் பொதுவாக பச்சரிசியால் செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவு. ஆனால் சிறுதானியங்களைப் பயன்படுத்தி செய்யும் பொங்கல், சுவையானதோடு மிகவும் சத்தானதும்கூட.
ஏன் வரகரிசி பொங்கல்?
இது நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்த ஒரு உணவாகும்.
எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த விருப்பம்.
செரிமானத்திற்கு உதவுவதோடு, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
வரகரிசி பொங்கல் செய்முறை
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – ½ கப்
வரகரிசி – ½ கப் (½ மணிநேரம் ஊற வைத்தது)
தண்ணீர் – 4 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
தாளிக்க:
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – சில
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 சிறிய துண்டு (நறுக்கியது)
பெருங்காயத்தூள் – சிறிது
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
வரகரிசியை நன்கு கழுவி, ½ மணிநேரம் ஊற விடுங்கள்.
ஒரு வாணலியில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து, மணம் வந்தவுடன் இறக்கி வைத்து கொள்ளுங்கள்.
ஒரு குக்கரில், வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வறுக்கவும்.
பின்பு ஊற வைத்த வரகரிசியை நீரை வடிக்கட்டி சேர்க்கவும்.
4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, 4-5 விசில் வரும் வரை சமைக்கவும்.
விசில் கழிந்த பிறகு, பொங்கலை கிளறி வைத்துக் கொள்ளுங்கள்.
தனியாக ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர் மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதை பொங்கலுடன் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறுங்கள்.
சூப்பரான சுவை, அதிகமான ஆரோக்கியம்.
இந்த வரகரிசி பொங்கல் உங்கள் காலை உணவாகோ, இரவு உணவாகோ மிக சிறந்த தேர்வாக இருக்கும். இனி நீங்கள் முயற்சி செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.