இந்தியாவில் 35 வகையான மருந்துகளுக்குத் தடை! 35 Drugs Ban
35 Drugs Ban : இந்தியாவின் முதன்மையான மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO), அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், முறையான அனுமதி பெறாமல் உற்பத்தி செய்யப்பட்ட 35 வகையான மருந்துகளை உடனடியாக உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும், விநியோகிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் வலி நிவாரணிகள், ஊட்டச்சத்துப் பொடி மற்றும் மாத்திரைகள், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் போன்றவையும் அடங்கும்.
மேலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளைக் கலந்து தயாரிக்கப்படும் நிலையான கூட்டு மருந்துகளுக்கு (Fixed-Dose Combination drugs – FDC) அனுமதி வழங்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறும்,
1940-ம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் விதிகளை கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய கூட்டு மருந்துகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முக்கியமான மருந்துப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தடைக்கான காரணம் என்னவென்றால், சில கூட்டு மருந்துகள் உரிய பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகள் மேற்கொள்ளப்படாமலேயே தயாரிக்கவும், விற்கவும், விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது பொதுமக்களின் உடல்நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமை இயக்குநர் ராஜீவ் ரகுவன்ஷி அவர்கள் அனைத்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
“சில குறிப்பிட்ட கூட்டு மருந்துகள், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் NDCT விதிகள் 2019-ன் படி, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த உரிய மதிப்பீடு செய்யப்படாமல் உற்பத்தி செய்யவும், விற்கவும், விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
இது பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.