உடல் பருமனும் அதிக எடையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 45 கோடி பேர் உடல் பருமனுடன் இருக்கலாம் என ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
ஆய்வின் முக்கிய தகவல்கள்
பிரபல மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 25 வயதிற்கு மேற்பட்ட 45 கோடி பேர் அதிக எடை அல்லது உடல் பருமனுடன் இருப்பார்கள். இதில் 22 கோடி ஆண்களும், 23 கோடி பெண்களும் அடங்குவர்.
உலகளவில், சீனாதான் முதல் இடத்தில் உள்ளது. 62 கோடி பேர் உடல் பருமனுடன் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அமெரிக்கா (21 கோடி), பிரேசில், நைஜீரியா ஆகிய நாடுகள் இடம் பிடிக்கின்றன.
உலகளவில் பரவியுள்ள உடல் பருமன்
2021ஆம் ஆண்டு வரை, உலகம் முழுவதும் 1.8 பில்லியன் ஆண்களும், 1.9 பில்லியன் பெண்களும் அதிக எடை கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டில் 3.8 பில்லியனாக அதிகரிக்கலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளஞர்களில் அதிகரிக்கும் உடல் பருமன்
2050ஆம் ஆண்டில்,
5 முதல் 14 வயதுக்குட்பட்ட 3 கோடி குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பார்கள்.
15 முதல் 24 வயதுக்குட்பட்ட 4 கோடி இளைஞர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படக்கூடும்.
உடல் பருமனுக்கான காரணங்கள்
உணவுப் பழக்கம், உடல்செயல்பாடுகளின் குறைவு, முறையற்ற வாழ்க்கை முறை போன்றவை உடல் பருமனை அதிகரிக்கக்கூடிய முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இது நீரிழிவு, இருதய நோய்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
இந்த நிலையை கட்டுப்படுத்த உடல் பருமனை எதிர்கொள்ள சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி முக்கியம் என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.