டெல்லி:
செங்கோட்டை (Red Fort) அருகே இன்று மாலை நடந்த கார் வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சம்பவம் குறித்த அனைத்து கோணங்களிலும் தீவிரமான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார், மருத்துவர்களிடமிருந்து நிலைமையை கேட்டறிந்தார்.
சம்பவம் எப்படி நடந்தது?
திங்கள்கிழமை மாலை 6.50 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் ஐ-20 கார் திடீரென தீப்பற்றி வெடித்தது.
வெடிப்பின் தாக்கத்தில் அருகில் இருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இதில் 8 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன. தலைநகர் முழுவதும் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா விளக்கம்
“இன்று மாலை டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் வெடிப்பு ஏற்பட்டது. சிலர் காயமடைந்தனர்; சிலர் உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்குள் டெல்லி குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டன.
என்எஸ்ஜி (NSG), என்ஐஏ (NIA), எஃப்எஸ்எல் (FSL) ஆகியவை இணைந்து விசாரணை நடத்துகின்றன. அனைத்து சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படும்,” என அவர் கூறினார்.
அமித் ஷா மேலும், “எந்தவொரு கோணத்தையும் தவிர்க்காமல், முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து உண்மையை வெளிக்கொணருவோம்,” என்றார்.
காவல்துறை தகவல்
ஒரு மூத்த அதிகாரி கூறியதாவது:
“லால் கிலா மெட்ரோ நிலையத்துக்கு வெளியே காரில் வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பின் தன்மை குறித்து இன்னும் தெளிவு இல்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்,” என்றார்.
டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா கூறுகையில், “அது ஓடிக்கொண்டிருந்த கார்; அதில் 2 அல்லது 3 பேர் இருந்ததாக தெரிகிறது. உண்மைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன,” என தெரிவித்தார்.
தீவிர அதிர்வு
வெடிப்பு மிக சக்திவாய்ந்ததாக இருந்ததால், அருகில் இருந்த வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்தன. சத்தம் சில கிலோமீட்டர் தூரத்திலும் கேட்கப்பட்டது என்று சாட்சிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி ஆய்வு
சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தகவல் பெற்றுள்ளார்.
அவர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசிச், நிலைமை குறித்து விரிவான அறிக்கை கோரியுள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Summary :
Amit Shah visits victims, orders all-angle probe into Delhi car blast near Red Fort; NSG, NIA join investigation, Delhi on high alert.








