27,000 அடி உயரத்தில் பறக்கும் வாத்துகள்! வெளிநாட்டு பறவைகளின் பிடித்த இடம் தமிழ்நாட்டில் – எங்கு தெரியுமா?

206.jpg

அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் அருகே அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், தற்போது மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்கிறது. அக்டோபர் முதல் மே மாதம் வரை நீடிக்கும் குளிர்கால சீசனில், வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் இங்கு திரளுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள், புகைப்படக் கலைஞர்கள் என பலர் இப்பகுதிக்குச் செல்கின்றனர்.

சுமார் 454 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்த சரணாலயம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய இயற்கை நீர்நிலைகளில் ஒன்றாகும். திபெத், லடாக், சைபீரியா, வடக்கு ரஷ்யா, மத்திய ஆசியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பறந்து பறவைகள் இங்கு வந்து தங்குகின்றன. போதுமான உணவு, அமைதியான சூழல், நீர்நிலைகள் என்பன பறவைகளுக்குச் சிறந்த தங்குமிடமாக அமைந்துள்ளன.

இந்த சீசனில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவை இனங்களும், 30-க்கும் மேற்பட்ட நிலப்பறவை இனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கான், கரண்டி மூக்கான், நத்தை கொத்தி நாரை, சாம்பல் கொக்கு, பாம்பு நாரை, நீர்காகம் போன்ற நீர்ப்பறவைகள் அடங்கும். மேலும் மயில், மரங்கொத்தி, ஆள்காட்டி குருவி, புறா, மைனா போன்ற நிலப்பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.

அருகிலுள்ள வயல்களில் அறுவடை முடிந்த பின் கிடைக்கும் நெல் தானியங்கள், இப்பறவைகளின் முக்கிய உணவாகும். பகலில் வயல்களில் உணவு தேடும் இவை, மாலை நேரத்தில் சரணாலய நீர்நிலைக்கு திரும்பி தங்குகின்றன. குறிப்பாக சூரிய அஸ்தமன நேரத்தில் பறவைகள் குழுக்களாக பறப்பது சுற்றுலா பயணிகளுக்கு மாயமான காட்சியாக திகழ்கிறது.

இந்த சரணாலயம் பல உயிரியல் ஆராய்ச்சிகளுக்கும் முக்கிய மையமாகும். பறவைகள் எவ்வாறு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பறந்து வழி தவறாமல் இங்கு வந்து சேர்கின்றன என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. குறிப்பாக வரித்தலை வாத்து என்ற இனங்கள் 27,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய கவனம் ஈர்க்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பிளாஸ்டிக் மாசு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வனத்துறை அதிகாரிகள் “பிளாஸ்டிக் இல்லா சரணாலயம்” என்ற விழிப்புணர்வு இயக்கத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கரைவெட்டி சரணாலயத்துக்குள் நுழைய முன்கூட்டியே அனுமதி பெறுதல் அவசியம். பார்வை மேடைகள், பறவைகள் கண்காணிக்கும் கோபுரம் போன்ற வசதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வனத்துறை அறிவுறுத்தலின்படி, காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை பார்வைக்கு திறந்திருக்கும்.

Summary :
This winter, Tamil Nadu’s Karivetti Bird Sanctuary comes alive with migratory birds, including bar-headed geese soaring at 27,000 feet.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *