ராஜபாளையம் கோவில் இரட்டை கொலை – கொள்ளையனை துப்பாக்கிச் சூட்டில் பிடித்த போலீசார்!

0248.jpg

விருதுநகர்: ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் இரவு காவலில் இருந்த 2 காவலாளிகள் கொலை செய்யப்பட்டு, கோவில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய நாகராஜ் என்பவரை போலீசார் துப்பாக்கிச் சூட்டில் பிடித்தனர்.

விருதுநகர் மாவட்டம் தேவதானம் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் தென்னகத்தின் பஞ்சபூத சிவ தலங்களில் “ஆகாய ஸ்தலமாக” வணங்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் இக்கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இங்கு இரவு காவலாளிகளாக பணியாற்றி வந்த பேச்சுமுத்து (50) மற்றும் சங்கரபாண்டியன் (65) ஆகியோர் வழக்கம்போல் முன்தினம் இரவில் பணியில் இருந்தனர். மறுநாள் காலை, கோவில் நிர்வாகம் கதவைத் திறந்தபோது இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் ராஜபாளையம் மற்றும் தேவதானம் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடல்களை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் நாகராஜ் என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், சம்பவ இடத்துக்குக் கொண்டு சென்றபோது நாகராஜ் திடீரென உதவி ஆய்வாளர் கோட்டியப்ப சாமியைத் தாக்கி தப்பிக்க முயன்றார்.

அச்சமயம் நிலைமையை சமாளிக்க காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், நாகராஜின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் அவர் காயமடைந்து தரையில் விழுந்தார்.

சுட்டுப் பிடிக்கப்பட்ட நாகராஜும், தாக்குதலில் காயமடைந்த உதவி ஆய்வாளர் கோட்டியப்ப சாமியும் உடனடியாக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் குறித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Summary  :
Police shot and arrested Nagaraj, accused of killing two temple guards and looting a Rajapalayam temple. Both injured men are under treatment.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *