பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி அறிவிப்பு: “நாடு போர் நிலையில் உள்ளது!”

221.jpg

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று (நவம்பர் 11) நடந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் பாகிஸ்தானில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் அதிர்ச்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார். “பாகிஸ்தான் இப்போது போர் நிலையில் உள்ளது,” எனவும், “ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களே இந்தத் தாக்குதலுக்கு நேரடியாக காரணம்,” எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பலுசு போராளிகள் மற்றும் தாலிபான்கள் நடத்திய தொடர் தாக்குதலால் அந்நாடு திணறி வருகிறது. அதில் நேற்று நடந்த இஸ்லாமாபாத் வெடிகுண்டு தாக்குதல் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

தகவலின்படி, கார் ஒன்றில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த தற்கொலைப்படை வீரர், நீதிமன்றக் கட்டிடத்துக்குள் நுழைய முடியாததால், அங்கிருந்த போலீஸ் வாகனத்தருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதனால் 12 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், கவாஜா ஆசிஃப், “இது எல்லைப் பிரதேசப் போராக இல்லை; பாகிஸ்தான் முழுக்க இப்போது போர் நடக்கிறது. தாலிபான் ஆட்சியாளர்கள் தான் இந்தப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும். பாகிஸ்தான் ராணுவம் மக்களைப் பாதுகாக்க தியாகம் செய்து வருகிறது. தேவையான பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு வலிமை உண்டு,” என உறுதியாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமாகும் ஆபத்துகள் குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்கள் கடும் கவலையுடன் தெரிவித்துள்ளன.

Summary :
Pakistan Defence Minister Khawaja Asif says nation at war after deadly Islamabad court suicide bombing; blames Afghan Taliban for attacks.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *