சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் போலீசார், அவருக்கு சம்மன் வழங்குவதற்காக சென்றபோது எதிர்பாராத பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.
சீமான் மீது 2011ல் பாலியல் தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, விசாரணைக்காக சீமானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
போலீசார் சம்மனை நேரில் வழங்க சீமான் இல்லத்திற்கு சென்றனர். அந்த சம்மனை வீட்டின் கதவிற்கு ஒட்டிய சில நிமிடங்களில், அது கிழிக்கப்பட்டது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை விளக்க கேட்ட போது, சீமானின் பாதுகாவலர் திடீரென கைத் துப்பாக்கியை எடுத்து நீட்டினார். இதில், போலீசாருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் கடுமையாக மாறிய நிலையில், 2 போலீசார் இணைந்து பாதுகாவலரை கட்டுப்படுத்தி கைது செய்தனர். அவரிடம் இருந்த கைத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அந்த பாதுகாவலர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக, சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. சம்மனை கிழித்தது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், அதை கிழித்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.