தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Anbumani Ramadoss

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

“தெலுங்கானாவைத் தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில அரசும் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

கர்நாடகம், பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.

ஆந்திரம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் தீபக் பிருவா, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிய அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதியே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்டுவிட்டன.

கணக்கெடுப்பு நடத்த தேவைப்படும் நபர்கள் மற்றும் செலவு குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

இதன் தேவை, வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக அரசுக்கு விரிவாக விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், தமிழக அரசு மத்திய அரசே கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது.

சமூக நீதிக்காக பிறந்ததாகக் கூறிக்கொள்ளும் திமுக, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விஷயத்தில் நாடகமாடுவதாக பாமக குற்றம் சாட்டுகிறது.

எனவே, தமிழக அரசு உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *