சல்மான் கான் காரில் வெடிகுண்டு வைப்போம்’ வாட்ஸ் அப்பில் வந்த பகீர் மிரட்டல் – Salman Bomb Threat
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வொர்லியில் அமைந்திருக்கும் போக்குவரத்துத் துறைக்கு வந்த வாட்ஸ்அப் செய்தி மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில், சல்மான் கானின் வாகனம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்றும், அவரைக் கொலை செய்வோம் என்றும் மிரட்டல் தொனியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சல்மான் கானுக்கு ஏன் மிரட்டல்கள் வருகின்றன?
கடந்த சில வருடங்களாக பிரபல நடிகர் சல்மான் கானுக்கு ரவுடித் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான குழுவிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக, 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த மான் வேட்டை தொடர்பான வழக்கில் சல்மான் கானை இலக்கு வைத்து இந்தக் குழு தாக்குதல் நடத்தப்போவதாகத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.
பிஷ்னோய் சமூகத்தில் கருப்பு மானுக்கு மதரீதியாக ஒரு முக்கியமான இடம் உண்டு. அதனை வேட்டையாடிய காரணத்தால் சல்மான் கானை அந்த சமூகத்தினர் குறிவைத்து பழிவாங்கத் துடிக்கிறார்கள்.
சல்மான் கான் இல்லத்தில் துப்பாக்கிச் சூடுச் சம்பவம் :
கடந்த ஆண்டு சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அதே ஏப்ரல் 14ஆம் தேதி மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. சென்ற ஆண்டும் இதே நாளில் அதிகாலையில் அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக சல்மான் கான் கூறினார். தன்னையும் குடும்பத்தையும் கொலை செய்ய முயன்றதாக அவர் தெரிவித்தார்.
ஆறு பேர் கைது :
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் சல்மானுக்கு பாதுகாப்பு அதிகரித்தது.
லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் பொறுப்பேற்றார். போலீசார் 1735 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 6 பேர் கைது.
அதில் ஒருவர் தற்கொலை, மற்ற 5 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
Summary: Bollywood actor Salman Khan receives a bomb threat via WhatsApp, warning of an attack on his vehicle and his life, prompting police investigation.