சென்னை:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE Act 2009) அடிப்படையில், 2025–26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று (அக்டோபர் 6) முதல் தொடங்குகிறது.
தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க அந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், தற்போது மாணவர் சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
சேர்க்கை ஒதுக்கீடு: சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG / Class I) 25% இருக்கைகள் ஒதுக்கீடு.
சேர்க்கை முறை: அதிகாரப்பூர்வ இணையதளம் rteadmission.tnschools.gov.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்கள் தகுதியுடையவர்களாக இருந்தால் தலைமை ஆசிரியர் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
முன்னுரிமை பிரிவுகள்: ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப்பாலினத்தவர், தூய்மை பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள்.
விண்ணப்பம் அதிகமாக இருந்தால்: குலுக்கல் (Random Selection) முறை பின்பற்றப்படும்.
கட்டணம் வசூல்: RTE தகுதி மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது. வசூலித்திருந்தால் 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
புகார் தீர்வு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் கண்காணிப்பை மேற்கொள்வர். புகார்களுக்கு தனி உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இச்சேர்க்கை முறையை வெளிப்படையான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.