சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.மருத்துவர்கள் தெரிவித்தபடி, 86 வயதான ராமதாஸ் தற்போது நலமாக உள்ளார். அவரை பார்க்க அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு சென்றார். “அப்பா நலமாக உள்ளார்; ஆனால் ICU-வில் இருப்பதால் 6 மணி நேரம் கழித்துதான் பார்க்க முடியும்” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது:
“ராமதாஸ் அவர்களை மருத்துவமனையில் சேர்த்த நேரத்திலிருந்தே நானே உடன் இருக்கிறேன். அன்புமணி எப்போது வந்தார் என எனக்குத் தெரியவில்லை.”
பின்னர் ஜி.கே. மணி, ராமதாஸ் அவர்களின் மனைவி மற்றும் மகளுடன் மருத்துவமனையில் எடுத்த புகைப்படத்தையும் தனது “X” (முன்னாள் Twitter) பக்கத்தில் பகிர்ந்தார். அதில்,
“மருத்துவர் ராமதாஸ் நலமாக உள்ளார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஆரோக்கியமாக உள்ளதாக உறுதி செய்துள்ளனர்” என்று பதிவிட்டார்.
பாமக உள்நிலைப் பிரச்சனை தொடர்கிறது
ராமதாஸ் – அன்புமணி இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் அதிகாரப் போட்டி தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் தலைமையையும் கூட்டணிக் கொள்கையையும் யார் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்தே மோதல் மையமாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, ராமதாஸ் தனது மகனான அன்புமணியை கட்சித் தலைவராக இருந்து நீக்கி, தானே மீண்டும் தலைவராக அறிவித்தார். அன்புமணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததும், அவர் கட்சி பிளவை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகளும் இந்த மோதலுக்குக் காரணம் என கூறப்படுகிறது. ராமதாஸ் பாஜக கூட்டணியில் தொடர விரும்பவில்லை என்றும், அன்புமணி அதற்கு எதிராக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தந்தை-மகனை சந்தித்து சமாதானம் செய்வதற்கான முயற்சியை எடுத்தது. ஆனால், ராமதாஸ் அதில் பங்கேற்க மறுத்ததால் முயற்சி தோல்வியடைந்தது. பின்னர் நீதிமன்றம் அன்புமணிக்கு பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்திமதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய கட்சி பொறுப்புகளை வழங்கி அதிகார அமைப்பை மறுசீரமைக்கத் தொடங்கியுள்ளார்.