நெல்லையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளனர். மறு அறிவிப்பு வரும்வரை கல்லூரி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
நெல்லை மேல்திடியூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பல மாணவர்கள் வெளியூரில் இருந்து படிக்க வந்திருப்பதால், கல்லூரி வளாகத்திலேயே தங்கும் விடுதி மற்றும் உணவக வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கல்லூரியின் அருகே உள்ள நம்பியாற்று பகுதியில் இருந்து உபரி நீர் சேகரித்து, மாணவர்கள் குடிநீர் மற்றும் உணவுக்காக எந்தவித சுத்திகரிப்பும் செய்யாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் மாணவர்களில் ஒருவருக்கு தொடர் தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டது. அப்போது அவரை கன்னியாகுமரி மாவட்ட தனியார் மருத்துவமனையில் சேர்த்து ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் எலிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தகவலை திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டதில், மேலும் 7 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு, எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் ஆய்வு நடத்தும்போது, பல இடங்களில் சுகாதாரமில்லாத நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது மற்றும் வளாகங்கள் சுத்தம் இல்லாமல் உள்ளதாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் மற்றும் உணவுகள் வழங்கும் முறைகள் ஏற்படுத்தப்படும் வரை கல்லூரியை மூட உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம், தேதி குறிப்பிடாமல், அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 15 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டதில் 8 பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.