தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பல புகார்கள் வந்துள்ள நிலையில், கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்க எச்சரித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்க, தீபாவளி சிறப்பு பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்படவுள்ளதாகவும், இந்த ஆண்டும் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிக கட்டண வசூல் குறித்த புகார்களைப் பெறுவதற்காக தொலைபேசி, வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வழியாகப் பதிவு செய்ய தனி புகார் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 10 ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை கட்டணத்தை குறைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி நாட்களில் அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் சுங்கச் சாவடிகளில் தாமதமின்றி செல்ல தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளில் பேருந்துகள் விரைவாக இயங்குகின்றனவா என்பதை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேரடியாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், சுங்கச் சாவடிகளில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளின் ஆவணங்களைச் சரிபார்க்கவும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Summary:
The Transport Department of Tamil Nadu has intensified monitoring of omni buses overcharging passengers ahead of Diwali holidays.