கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி – விவசாய வேலையின் நடுவே நிகழ்ந்த சோகம்

0060.jpg

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (அக்டோபர் 16) மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதன்போது, வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மக்காச்சோளம் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திடீரென பெய்த இடி மின்னலுடன் கூடிய மழையால், வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த வயல் உரிமையாளர் ராஜேஸ்வரி மற்றும் கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி, கணிதா ஆகியோர் மீது மின்னல் தாக்கியது. இதில் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதே நேரத்தில் தவமணி எனும் பெண் பலத்த காயமடைந்து முதலில் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இடி மின்னல் தாக்கியதில் ஒரே நேரத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியில் இருந்த அந்தக் கிராமத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary:
Four women lost their lives after being struck by lightning while working in a cornfield near Veppur, Cuddalore. The tragic event occurred amid heavy rains triggered by the northeast monsoon in Tamil Nadu.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *