உலகில் பெண்களின் ஆரோக்கியம் பற்றி பேசும்போது பெரும்பாலும் மன அழுத்தம், உடல் பருமன், அல்லது மாதவிடாய் பிரச்சனைகள் குறித்து நாம் கவலைப்படுகிறோம். ஆனால் அதைவிட தீவிரமான, மெல்ல மெல்ல வளரக்கூடிய ஒரு நோயாக மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) உருவாகிறது.
உலகளவில் ஒவ்வொரு 8 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.இந்த நோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பது ஓர் மகிழ்ச்சியான உண்மை.
ஆனால் அதற்காக பெண்கள் தங்களின் உடலைப் பற்றி தெரிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மார்பகப் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணங்கள்:
மார்பகப் புற்றுநோய் ஒரு நாளில் வரும் நோய் அல்ல. இது பல வருடங்களாக உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்கள், வாழ்க்கை முறை, மரபியல் காரணங்களால் மெது மெதுவாக உருவாகும்.
1. மரபியல் காரணம் (Genetic Reason):
அம்மா, சகோதரி அல்லது பாட்டி போன்ற நெருங்கிய உறவினர் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த குடும்பத்தின் பெண்களுக்கு வர ஆபத்து அதிகம் இருக்கும். இது BRCA1 மற்றும் BRCA2 என்ற ஜீன்களில் உள்ள மாற்றங்களால் ஏற்படும்.
2. வயது மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்:
40 வயதிற்குப் பின் பெண்களில் ஹார்மோன் சமநிலை மாறுகிறது. மாதவிடாய் மிக விரைவாக வருதல் அல்லது மெனோபாஸ் தாமதமாக வருதல் ஆகியவை மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்பை உயர்த்தும்.
3. குழந்தை பிறப்பில் தாமதம்:
30 வயதுக்குப் பிறகு குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் அல்லது குழந்தை பெறாதவர்களின் மார்பகத்தில் ஹார்மோன் அழுத்தம் அதிகம் காணப்படலாம்.
4. உணவு பழக்கம் மற்றும் உடல் எடை:
பெரும்பாலும் ஜங்க் உணவு, எண்ணெய், சர்க்கரை நிறைந்த உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை ஆகியவை ஹார்மோன்களை பாதிக்கிறது . இது உடல் எடையையும் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
5. மதுபானம் மற்றும் புகைபிடித்தல்:
மதுபானம், சிகரெட் ஆகியவை மார்பகத்தின் ஹார்மோன் நிலையை பாதித்து புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.
மார்பகப் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?
மார்பகப் புற்றுநோய் வருவதை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், சில பழக்க வழக்கங்களை வைத்து விழிப்புணர்வு வழிமுறைகள் மூலம் அதைக் குறைக்க வாய்ப்பு அதிகம்.
1. Self-Examination (சுய பரிசோதனை):
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த பிறகு ஒரு முறை கண்ணாடி முன் நின்று மார்பில் எந்த மாற்றம், கட்டி அல்லது வலி இருக்கிறதா என்று கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும்.
நிப்பிள் சுற்றி சுரப்பி, வலி, அல்லது தோல் மாற்றம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
2. மருத்துவ பரிசோதனைகள் (Screening):
40 வயதிற்குப் பிறகு பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை Mammogram பரிசோதனை செய்வது கட்டாயம்.
இந்த பரிசோதனை மூலம் ஆரம்ப கட்டத்தில் கட்டிகளை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
3. ஆரோக்கியமான உணவு பழக்கம்:
தினமும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். வறுத்த உணவு, கொழுப்பு, மது, சர்க்கரை போன்றவற்றை குறைத்துக்கொள்ளுங்கள். கீரைகள், கருப்பு உளுந்து, பச்சை காய்கறிகள் மார்பக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவை.
4. உடற்பயிற்சி மற்றும் மன அமைதி:
தினசரி 30 நிமிடம் நடைபயிற்சி, யோகா அல்லது லைட் எக்சர்சைஸ் செய்யுங்கள். மன அழுத்தம் குறையும்போது ஹார்மோன் சமநிலையும் சீராகும் உடலில் சிறு புத்துணர்ச்சியை உணருவீர்கள் .
5. தாய்ப்பால் கொடுப்பது (Breastfeeding):
தாய்ப்பால் கொடுப்பதன் முலம் மார்பக புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் இயற்கையான வழியாகும்.
விழிப்புணர்வும் நம்பிக்கையும் வாழ்க்கையை காக்கும்:
மார்பகப் புற்றுநோய் குறித்து சமூகத்தில் இன்னும் பல பெண்களுக்கு விழிப்புணர்வு குறைவு. பலர் வெட்கம் அல்லது பயம் காரணமாக ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் ஆரம்ப நேரத்திலான கண்டறிதால் உயிரைக் காப்பாற்ற முடியும்.
இன்று நீங்கள் உங்களுக்காக ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டு, உடலில் மாற்றங்களை கவனிக்க ஆரம்பியுங்கள். உங்கள் உடல் உங்களிடம் பேசும். அதை கவனமாக கேளுங்கள்.மருத்துவரை சந்திக்க கூச்சப்படாதிங்க ,பயப்படாதீர்கள். சிகிச்சை முறைகள் இப்போது மிகவும் மேம்பட்டுள்ளன. சரியான சிகிச்சை பெற்றால் மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.
பெண்களின் அழகு அவர்களின் சிரிப்பில் மட்டுமல்ல — அவர்களின் ஆரோக்கியத்திலும் இருக்கிறது.
மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி, தங்களைப் பற்றிக் கவனிப்பது ஒவ்வொரு பெண்ணின் கடமை இப்படிக்கு உங்கள் தோழி பிரதீபா .
Summary:
Breast cancer is one of the most common health issues affecting women worldwide. Early detection and awareness can save lives.
Simple lifestyle changes like healthy eating, exercise, and regular checkups help reduce risk. Every woman deserves to stay informed, healthy, and confident about her body.