புதுச்சேரி:
புதுச்சேரி விடுதலை தினமான இன்று, “என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணியின் ஊழல்வாத ஆட்சியால் மக்கள் இன்னும் விடுதலை பெறாத அடிமைகளே” என்ற கருத்தை முன்வைத்து, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் “அடிமை தினம்” எனக் குறிப்பிட்டு அனுசரித்தது.

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூனில் உள்ள எம்.ஜி.ஆர் சாலையில், விஜயகுமார் இல்லத்தில் அந்த இயக்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்றது.
அவர் உரையாற்றியபோது கூறியதாவது:
“புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் மிகுந்த ஆட்சியே இப்போது நிலவுகிறது. இதற்கான உதாரணம் மின் துறையில் நடந்த ஆட்சேர்ப்பு முறைகேடு. 177 பணியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும், காரைக்காலைச் சேர்ந்த 80 பேரில் 20 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கச் செய்வதற்காக அரசு விதிகளை மோசடியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் பல பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “அரசு விதிகளையும், உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தகுதியற்றவர்களுக்கு லஞ்சம் வாங்கி வேலை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கான உண்மை வெளிச்சத்துக்கு வர சி.பி.ஐ. விசாரணை அவசியம். வேளாண் துறையிலும் இதேபோன்ற ஊழல் நடைபெற்று வருகிறது. எனவே, இந்நிலையில் நாம் விடுதலையானவர்கள் அல்ல, அடிமைகளே. அதனால்தான் இன்று ‘அடிமை தினம்’ எனக் கொண்டாடுகிறோம்,” என்றார்.
நிகழ்ச்சியில் வினோத் வரவேற்புரை வழங்கினார். முடிவில் முருகானந்தம் நன்றி தெரிவித்தார்.
Summary :
The Indian Anti-Corruption Movement observed Puducherry Liberation Day as “Slavery Day,” citing massive corruption under the NR Congress–BJP government.








