கோவை நகரில் கல்லூரி மாணவி ஒருவரை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மூவரையும், போலீசார் துப்பாக்கிச் சூட்டில் சுட்டு பிடித்தனர்.
நேற்றிரவு (நவம்பர் 3) கோவை விமான நிலையம் பின்புறம் ஆளரவமற்ற இடத்தில் மாணவி தனது நண்பருடன் காரில் இருந்தபோது, மூவர் கொண்ட கும்பல் தாக்கி, மாணவியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்தது. மாணவியின் நண்பர் அரிவாளால் தாக்கப்பட்டு கடுமையாக காயமடைந்தார்.

இந்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்த, குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இன்று அதிகாலை, குற்றவாளிகள் வெள்ளகிணர் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் வளைத்தபோது, குற்றவாளிகள் அரிவாளால் தாக்கினர். இதில் தலைமைக் காவலர் சந்திரசேகர் காயமடைந்தார்.
அதையடுத்து, காவல் ஆய்வாளர்கள் அர்ஜுன் மற்றும் ஞானசேகரன் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூவரின் கால்களில் குண்டு பாய்ந்தது. குணா, சதீஷ் (எ) கருப்பசாமி மற்றும் கார்த்திக் (எ) காளீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மூவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் முன்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் என்றும் தெரியவந்தது.
காயமடைந்த குற்றவாளிகளும் காவலரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிகழ்வு கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary :
Coimbatore police arrested three men after a gunfire encounter. They were accused of gang-raping a student and attacking her friend with a weapon.









